பறவைக்காய்ச்சல்: தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தேவை!அன்புமணி

0
15

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: ’’கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் தமிழகத்திலும் பரவக்கூடிய ஆபத்து அதிகமுள்ள நிலையில் அதுகுறித்த புரிதலின்றி அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரின் தாசரஹள்ளி பகுதியிலுள்ள புவனேஸ்வரி நகரில் தான் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் முதன்முதலில் கண்டறியப்பட்டன. அப்பகுதிக்கு இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட கோழிகள் திடீரென இறந்த நிலையில், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்திய போது பறவைக் காய்சலால் தான் அவை உயிரிழந்தன என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான கோழிகள் கொன்று புதைக்கப் பட்டுள்ளன. இதனால் கர்நாடக மக்களிடையே ஒருவிதமான பதற்றம் நிலவி வரும் நிலையில், பெங்களூர் மாநகராட்சியின் ஏலகங்கா மண்டலத்தில் கோழி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நல்வாய்ப்பாக கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எனினும், பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கும், தமிழகத்திலிருந்து பெங்களூருக்கும், குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சென்று வருவதால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பெங்களூர் வழியாக தமிழகத்திற்கு வரும் தொடர்வண்டி பயணிகள் அனைவருக்கும் பாலக்கோடு, தருமபுரி, சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுக்காக மருத்துவ ஆய்வு செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பெங்களூரிலிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு வருவோருக்கும் இத்தகைய மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த கோழிகளில் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுவதால் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள கோழிப் பண்ணைகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும், நோய் ஒழிப்பு பணிகளும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தமிழக மக்களுக்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்றுவது மிகவும் அரிதானது தான் என்றாலும் கூட, அவ்வாறு நோய்த்தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட 60% வரை ஆபத்து உள்ளதாகவும், அதனால் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் டெங்குக் காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களால் தமிழகம் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை சந்தித்து இருக்கிறது. இத்தகைய சூழலில் பறவைக் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையில் தமிழக மக்கள் இல்லை.

எனவே, இந்த பறவைக் காய்ச்சல் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் தமிழக – கர்நாடக எல்லைப் பகுதிகளிலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். பறவைக் காய்ச்சலால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here