ஆப்பிள் பழங்களால் ஆபத்தா?

0
15

‘பழங்களின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் ஆப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாசல பிரதேசம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் ஆப்பிள் பயிரிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள், நமக்கு வந்து சேருவதற்கு பல நாட்கள் உருண்டோடி விடுகிறது.

அதுவும் இயற்கை தன்மையுடன் நமக்கு வந்து சேருவதில்லை. செயற்கையாக மெழுகு முலாம் பூசப்பட்ட பழங்களே நமக்கு வந்து சேரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கனி என்றாலே, கனிவு தன்மை இருக்கத்தான் செய்யும். இது, ஆப்பிள் பழங்களுக்கும் பொருந்தும். அழுகி போனால், வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை முறையில் பழங்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்காக, ஆப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்பட்டு வருகிறது.

அதாவது ராட்சத தொட்டியில், இளஞ்சூட்டுடன் கூடிய மெழுகு கலவையில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்படுகின்றன. சிறிது நேரத்தில் அந்த பழங்களை எடுத்து துணியால் துடைத்து, அதனை அட்டை பெட்டிகளில் அழகாக அடுக்கி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பழங்கள், 15 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும்.

மெழுகு முலாம் பூசப்பட்ட இந்த பழங்கள், பார்த்தவுடனேயே சாப்பிட தூண்டும் வகையில் பளிச்சென்று காட்சி அளிக்கும். ஆப்பிள் பழங்களின் தோல் பகுதியை நகங்களால் சுரண்டி பார்த்தால் மெழுகு துகள்கள் ஒட்டியிருப்பது தெரியவரும். வயிறுக்குள் செல்லும் மெழுகு, நமக்கு பல்வேறு நோய்களை கொண்டு வந்து சேர்க்கிறது. குறிப்பாக செரிமானக்கோளாறு, நெஞ்சு எரிச்சல், குடல் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. இது, மெல்ல கொல்லும் விஷம் போன்றது என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

ஊட்டச்சத்து நிறைந்தது என்று கருதி, சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஆப்பிள் பழங்கள் ஆபத்து நிறைந்தது என்ற அதிர்ச்சி தகவல் நம்மை அலற வைத்திருக்கிறது. லாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மெழுகு பூசாத ஆப்பிள்களை விற்பனை செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here