kerala style nadan chicken : ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் சற்று ஸ்பெஷலாக மட்டன் அல்லது சிக்கன் செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அப்படியானால், வழக்கமான குழம்பைத் தவிர்த்து ஒருமுறை கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறியை செய்து பாருங்கள்.
நறுமணமிக்க மசாலாக்களுடன் தயாரிக்கப்படும் இந்த நாடன் சிக்கன் கறி, இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

அந்தவகையில், வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் குஷியாக்கும் கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறியை எளிமையாக எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கரம் மசாலா தயாரிக்க
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
அன்னாசிப்பூ – 2
பட்டை – 1 சிறிய துண்டு
சிக்கன் குழம்பிற்கு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சோம்பு – 1/4 டீஸ்பூன்
மிளகு – சிறிதளவு
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
கறிவேப்பிலை – 1கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 2, நறுக்கியது
சிக்கன் – 1 கிலோ
பச்சை மிளகாய் – 2, நறுக்கியது
தண்ணீர் – 2 கப்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
அரைத்த கரம் மசாலா – தேவையான அளவு
கெட்டியான தேங்காய் பால் – 2 கப்

தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10, பொடியாக நறுக்கியது
தேங்காய் சீவல் – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் கரம் மசாலாவை தயாரித்துக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் பட்டையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை லேசாக வறுக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்து, மசாலா பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் நன்றாகப் பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்து, அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகு மற்றும் பிரியாணி இலையை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது நன்றாகக் குழையும் வரை சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். அதன் பிறகு சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து மசாலா நன்றாகப் படும்படி கிளறவும்.
நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, பாத்திரத்தை மூடி வைத்து சிக்கனை 10–15 நிமிடங்கள் வேகவிடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, மிளகுத் தூள் மற்றும் அரைத்த கரம் மசாலாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி மெதுவாகக் கிளறவும். மீதமுள்ள 1 கப் தண்ணீரைச் சேர்த்து, உப்பு சரிபார்த்து தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

மூடி வைத்து குழம்பு நன்றாகக் கொதிக்க விடவும். இறுதியாக குழம்பிற்கு தாளிப்பு தயாரிக்கலாம். ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காய் சீவல் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து லேசாக வறுத்து, இந்தத் தாளிப்பை சிக்கன் குழம்பில் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான். மணமணக்கும் தேங்காய் வாசனையுடன் சுவையான கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் குழம்பு தயார்.
