ஆறுமுகன் தொண்டமானின் மூத்த மகள் கோதை நாச்சியாருக்கு தந்தையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு 15 நிமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூதவுடல் வைக்கப்பட்ட இடத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, தனிமையில் தந்தையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள ஓமானில் இருந்து வந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்வி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் புதல்வியான மருத்துவர் கோதை நாச்சியார் தொண்டமான், ஓமானின் மஸ்கட் நகரில் சேவையாற்றி வருகிறார்.
தனது தந்தை உயிரிழக்கும் போதும் அவர் மஸ்கட் நகரிலேயே இருந்துள்ளார்.
இறுதியாக கோதை நாச்சியார் மஸ்கட் நகரில் PCR பரிசோதனையின் பின்னர் விமானம் மூலம் இந்தியாவின் கோழிகோடுக்கு வந்துள்ளார்.
தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கூறி தனியார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
எனினும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தந்தையின் இறுதிச் சடங்கில் மகள் கலந்துக்கொள்ள சந்தர்ப்பத்தை வழங்குமாறு குடும்ப உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தொண்டமானின் இறுதிச் சடங்குகளை வீடியோ மூலம் காணும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.