கென்யாவைச் சேர்ந்தவர் பீட்டர் கிஜென். அவர், வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் அவரை கென்யாவின் கெரிசோ பகுதியிலுள்ள கப்ளாடெட் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, பீட்டரின் உறவினர்களிடம் அவர் உயிரிழந்துவிட்டதாக செவிலியர் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, பீட்டர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட உடன், அவரதுஉடல் உடனடியாக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலிருந்து ரத்தத்தை வெளியே எடுத்துவிட்டு எம்பால்மிங் செய்யும் பணியைத் தொடங்குவதற்கு அங்குள்ள பணியாளர்கள் ஆயத்தமாகினர். அப்போது, பீட்டர் உயிருடன் இருப்பதை அங்குள்ள பணியாளர்கள் உணர்ந்துள்ளனர். பீட்டர், சுயநினைவுக்கு வந்ததையடுத்து, தான் இருக்கும் இடம் எதுவென்று தெரியாமல் அவர் அலறியுள்ளார். பீட்டர், அலறுவதைக் கண்டு அங்கிருந்து பணியாளர்கள் ஓடிச்சென்று மருத்துவரை அழைத்தனர்.
பீட்டரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சையளித்தனர். இதுகுறித்து தெரிவித்த பீட்டர், ‘என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. எதற்காக நான் இறந்துவிட்டேன் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. சுயநினைவு வந்தபோது, நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. என் உயிரைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி. என்னுடைய மீதமுள்ள வாழ்க்கையில் நான் இறைவனுக்கு சேவை செய்வேன்’ என்று தெரிவித்தார். பீட்டரின் குடும்பத்தினர் மருத்துவமனை மீது புகார் தெரிவித்துவருகின்றனர்.