'டிவி' நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவரிடம், மூன்றாவது நாளான நேற்று, போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை பூந்தமல்லி அருகே, கணவருடன் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த, பிரபல, 'டிவி' நடிகை சித்ரா. இவருக்கு வயது 29. இம்மாதம், 9-ம் தேதி, அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். சித்ராவின் தற்கொலைக்கு, கணவர் ஹேம்நாத், அவரின் தாயார் விஜயா ஆகியோர் தந்த அழுத்தமும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் விசாரணை
தற்கொலை குறித்து விசாரித்து கொண்டிருந்த போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. நிச்சயம் முடிந்து பதிவு திருமணம் செய்த நாளில் இருந்தே, நடிகை சித்ரா மீது, ஹேம்நாத்-திற்கு சந்தேகம் இருந்ததால் தான் சித்ராவுடன் ஓட்டலில் தங்கினாராம்.
படப்பிடிப்பு தளத்தில், ஹேம்நாத் குடிபோதையில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹேம்நாத்தின் நடவடிக்கைகள் குறித்து, சக நடிகையரிடம் சித்ரா புலம்பியும் உள்ளார். இதனால், கடந்த நான்கு மாதங்களாக, அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் மொபைல் போன்கள், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்யப்படுகின்றன. இருவருக்கும் நடந்த, எஸ்.எம்.எஸ்., உரையாடல்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
மேலும், சித்ராவின் மொபைல் போனில் இருந்து, பல தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்ப பெறும் முயற்சியில், சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
திடுக்கிடும் தகவல்
ஹேம்நாத்திடம் இரண்டு நாட்களாக, நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர். சென்னை அம்பத்துார் துணை கமிஷனர் தீபா சத்யன், மூன்றாவது நாளான நேற்று, ஹேம்நாத்திடம் விசாரித்தார்.
பின், அவரது தந்தை மற்றும் நடிகர், நடிகையரிடம் போலீசார் விசாரித்தனர். அதேபோல, கைரேகை நிபுணர்கள், சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று, தடையங்களையும் சேகரித்தனர்.
இவ்வழக்கில், ஆர்.டி.ஓ., விசாரணையில் தாமதம் செய்யப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்ராவிற்கு ஏற்பட்ட தேவையில்லாத அரசியல் தொடர்பும் இவரது இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
சித்ராவின் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் தினேஷிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, சித்ராவின் நட்பு வட்டத்தில், சில அரசியல் பிரமுகர்கள் இருந்தது தெரியவந்தது.
சில மாதங்களுக்கு முன், சித்ரா ஓட்டல் திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, அங்குள்ள அரசியல் கட்சி பிரமுகரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அதன் பின், புதுக்கோட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர் அறிமுகமானதாக கூறப்படுகிறது. தன்னுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, அவர் வலியுறுத்தியாகவும் கூறப்படுகிறது.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட ஓட்டலுக்கு, அந்த அரசியல் பிரமுகர் அடிக்கடி சென்றதும் தெரியவந்தது. இது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆன பெண்ணுக்கு இப்படியான அரசியல் பிரமுகர்கள் கொடுத்த தொந்தரவும் கணவன், மனைவி இருவருக்குள்ளும் சந்தேக மேகத்தை உருவாக்கியிருக்கலாம் என கூறுகிறார்கள்.
ஏற்கனவே நிச்சயம் செய்து திருமணம் நின்றது
நடிகை சித்ராவிற்கு ஏற்கனவே வேறொரு ஆணுடன் நிச்சயம் நடைபெற்று பிறகு திருமணம் நின்று போனது என்ற அதிர வைக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், அப்போது மனம் தளராமல் இருந்த சித்ரா இப்படி இரண்டாவதாக நிச்சயம் முடிந்து பதிவு திருமணமே முடிந்து விட்டது என்று சொல்லப்படும் சூழ்நிலையில் இப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனைக்குறிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.