Koundampalayam Chicken curry: ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒரு வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் சண்டே மதிய உணவு முழுமையடையாது என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.
வாரம் முழுவதும் வேலை, பள்ளி என பரபரப்பாக இருக்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ரசித்து சாப்பிடுவதும் ஒரு சிறிய கொண்டாட்டமாகவே மாறிவிடுகிறது.

இன்றும் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?எப்போதும் செய்வது போல சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் அல்லது சிக்கன் 65 என ஒரே மாதிரியான உணவுகளைச் செய்வதற்குப் பதிலாக, இந்த முறை குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் சற்று வித்தியாசமான, மணமணக்கும் மற்றும் சுவையான சிக்கன் சைடு டிஷ் ஒன்றைச் செய்து பார்க்கலாம்.
அதுவும் அதிக சிரமம் இல்லாமல், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு சிறப்பான, ‘கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு’ செய்முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் – ¾ கிலோ
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – ½ டீஸ்பூன்
மிளகு – ½ டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
தேங்காய் – ½ மூடி (துருவியது)
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும். இதை சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.

ஆறியதும் வதக்கிய கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து அதே பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அது நன்றாக மென்மையாகும் வரை வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கழுவி சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து நன்றாகக் கிளறி வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
பின்னர் மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மீண்டும் மூடி வைத்து 10–15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்து, குழம்பு தேவையான பதத்திற்கு வந்ததும் மூடியைத் திறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறி அடுப்பை அணைத்தால், அவ்வளவுதான்! சுவையான, மணமணக்கும் கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு தயார்.
