பெண்களை மதிக்காமல் அவர்களை பாலியல் உறவுக்காக மட்டும் பயன்படுத்த நினைவுக்கும் ஒரு நபருக்கும், திருமணத்திற்கு பிறகு காதல் என்று இருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.  

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம்வரும் நடிகர் கார்த்திக் பல பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் கதையை முதல்முறை நிராகரித்த அவர், அதே இயக்குனர் அந்த கதையை 2-வது முறை சொன்னபோது மறுப்பு எதுவும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். அந்த படம் எந்த படம் தெரியுமா? 

பாரதிராஜா இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கார்த்திக். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக், முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தார். அதன்பிறகு ஆகாய கங்கை, மௌனராகம், அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், தெய்வ வாக்கு, பொண்ணுமணி, உள்ளத்தை அள்ளித்தா என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 

அந்த வரிசையில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் தான் கோகுலத்தில் சீதை. அஜித் நடிப்பில், வான்மதி, காதல்கோட்டை ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் அகத்தியன் இயக்கிய இந்த படத்தில் கார்த்திக்குடன் சுவலட்சுமி, கரண், மணிவண்ணன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். பெண்களை மதிக்காமல் அவர்களை பாலியல் உறவுக்காக மட்டும் பயன்படுத்த நினைவுக்கும் ஒரு நபருக்கும், திருமணத்திற்கு பிறகு காதல் என்று இருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.  

இந்த படத்தின் கதையை முதலில் கேட்ட நடிகர் கார்த்திக் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் அதே கதையை மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட்ட கார்த்திக் மறுப்பு சொல்லாமல் உடனடியாக ஒப்புக்கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து ஜெயா டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் சின்னி ஜெயந்த், கோகுலத்தில் சீதை என்னை மட்டும் அல்ல பலரையும் கவர்ந்த ஒரு திரைப்படம். அந்த படத்திற்கு உங்களுக்கு அவ்வளவு ஈடுபாடு வந்தது எதனால் என்று கேட்டுள்ளார். 

இதற்கு பதில் அளித்த கார்த்திக், இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பு, கதை சொன்னார் இயக்குனர். ஆனால் அதற்கு முன்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே கதையை என்னிடம் கூறியுள்ளார். ஆனால் அப்போது இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை. நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால் 2-வது முறை பொள்ளாச்சியில் சொன்னபோது மறுப்பேச்சு பேசாமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இந்த படத்தை பண்றோம் அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டேன். படத்தின் முதல் ஷாட் பெங்களூருவில் எடுத்தோம் என்று கார்த்திக் கூறியுள்ளார்.

இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் படத்தை எழுதி இயக்கிய அகத்தியனே இந்தியில், இந்த படத்தை இயக்கியிருந்தார்.