எனக்கு நஷ்டம் என்று நானும் சொல்ல முடியாது. நான் இப்போது வரை அந்த படத்திற்கு வாங்கிய கடனுக்காக வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் பிக்பாஸ் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் பேசியது இணையத்தில் பெரும் வைரலாக பரவிய நிலையில், இவரின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில் தான் நடித்து தயாரித்த கடைசி விவசாயி படம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி, நான் இந்த படத்திற்க்கு இணை தயாரிப்பு செய்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தான். அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. படம் வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல படத்தை எடுத்திருக்கிறோம் என்ற மன நிறைவு இருந்தது.
இந்த படத்தைப் பற்றி என்னிடம் பல இடங்களில் கேட்டார்கள். நான் அதற்கு சொல்கிற ஒரே விஷயம் சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனிடம் ஒரு பேட்டியில் நீங்கள் சினிமாவில் தயாரித்து நஷ்டம் ஆனது உங்களுக்கு எப்படி இருந்தது கேட்டபோது, அதற்கு அவர் பணம் செலவு பண்ணுனது நஷ்டம் என்று சொல்ல முடியாது. என்னுடைய அம்மா இறந்து போயிட்டாங்க, அவங்க இனி திரும்ப வரவே மாட்டாங்க.. அதுதான் நஷ்டம். ஆனால் பணம் எப்போது வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்,
நான் இந்த சினிமா துறையில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் தான் போடுகிறேன். அதனால் அது நஷ்டம் என்று நான் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். அதுதான் என்னுடைய கருத்தும். இது எனக்கு நஷ்டம் என்று நானும் சொல்ல முடியாது. நான் இப்போது வரை அந்த படத்திற்கு வாங்கிய கடனுக்காக வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது வேற கதை. தொடர்ந்து என்னால் படம் நடிக்க முடியும். அந்த கடனை அடைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கடைசி விவசாயி படத்தைப் பற்றி கூலாக பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடைசி விவசாயி படத்திற்காக வாங்கிய கடனை பற்றி அவர் பெருந்தன்மையாக பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் தான் கடைசி விவசாயி. நல்லாண்டி என்பவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில, விஜய் சேதுபதி ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். மணிகண்டனின் இயக்கமும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டன. படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும், திரையரங்க வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.இந்த படத்திற்கு விஜய் சேதுபதியும் தயாரிப்பாளராக இருந்தார். அதனால் அவருக்கு கடன் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
