சமூக ஊடகங்களில் இருந்து விலகிய தனது முடிவு குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி அதிலிருந்து விலகிய பிறகு, தான் 'வாழ்க்கையில் ஒரு சிறந்த நிலையில்' இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களை விட்டு விலகியதில் இருந்து மன அமைதி கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் விலகுவதற்குக் காரணமாக இருந்த அம்சங்கள் இன்னமும் நிலவுவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளையில், தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் எல்லை மீறல் தவிர்த்துப் பார்த்தால், சமூக ஊடகங்கள் ஒரு முக்கியமான தொழில்முறை கருவி என்று வாதிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா, இந்த முடிவு தனக்கு முன்பு இல்லாத ஒரு அமைதியைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். "எல்லாமே இப்போது சரியான பாதையில் செல்கிறது. எனது தற்போதைய வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சமூக ஊடகங்களில் இருந்தபோது இருந்ததை விட இப்போது மிகவும் மன அமைதியுடன் இருக்கிறேன்" என்று பூஜா தல்வாருடனான உரையாடலில் அவர் கூறினார். 

மேலும், "நான் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறக் காரணமான விஷயங்கள் இன்னமும் குறிப்பிட்ட அளவில் நிலவுவதை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் குறைந்தபட்சம் நான் எப்போதும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கவோ, அதனால் பாதிக்கப்படவோ இல்லை. ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில் நான் இப்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார். 

தங்களது நெட்ஃபிலிக்ஸ் தொடரான '#லவ்' ப்ரமோஷன் தொடர்பான நிகழ்ச்சியின்போது ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸுடன் கலந்துகொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், இதே பிரச்சனை குறித்து ஒரு தயாரிப்பாளரின் பார்வையை முன்வைத்தார். "சமூக ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால் தொழில்முறை எல்லை முடிந்து, தனிப்பட்ட தாக்குதல்களோ அல்லது கருத்துகளோ தொடங்கும்போதுதான் அது எல்லையை மீறுகிறது" என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

மேலும், "தயாரிப்பாளர்களான எங்களுக்கே இன்ஸ்டாகிராம் கணிப்புகள் அவசியமாகின்றன. மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஒரு டிரெய்லர் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறோம். அதை நான் மறுக்கப்போவதில்லை. எங்கள் கலைஞர்கள் கேமராவுக்கு முன்னால் இருப்பதால் அவர்களுக்கு இது வேறு மாதிரியாக இருக்கிறது. படைப்பாளர்களும், கதைசொல்லிகளுமான நாங்கள் கேமராவுக்குப் பின்னால் இருப்பதால் எங்களுக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. ஒருவேளை அவர்களைப் போல நாங்கள் அவ்வளவு இரக்கமின்றி இலக்கு வைக்கப்படுவதில்லை. கலைஞர்களுக்கு இது கடினமானது, அதனால் ஐஸ்வர்யா எடுத்த முடிவை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சமூக ஊடகங்களைச் சுற்றியுள்ள கலாச்சாரம் மேம்பட்டால், அது திரையுலகிற்குப் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் சமூக ஊடகங்களுக்கு வரும்போது இன்னும் சிறிது உணர்வுப்பூர்வமாக நடந்துகொண்டால், எல்லாமே இனிமையாக இருக்கும். இன்று நமக்குச் சமூக ஊடகம் தேவைதான். ஆனால் அது இப்போது இருப்பதை விட இன்னும் பல மடங்கு ஆரோக்கியமாக இருக்க முடியும் என நினைக்கிறேன்" என்றார்.

அதேநேரம், சமூக ஊடகங்களை முற்றிலுமாக நிராகரிக்காதவாறு கவனமாக பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, சுயாதீன படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்கள் அளித்துள்ள அதிகாரத்தை ஒப்புக்கொண்ட அவர், கேரளாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் ஊடகப் பிரபலமும் படைப்பாளியுமான ஹாஷிரை உதாரணமாகக் குறிப்பிட்டார். இவரது பிரபலம் காரணமாக, வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த மலையாள திரைப்படங்களில் ஒன்றான 'வாழ 2' படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார்.

இப்போது அந்த அதிகாரம் படைப்பாளிகளிடமும் இருக்கிறது. முன்னரெல்லாம் திரையுலகம் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது உங்களைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தவோ, உங்களை உயர்த்திக்கொள்ளவோ ஒரு வழி இருக்கிறது. கேரளாவில் சமீபத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றான 'வாழ 2' படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் ஒருவரான ஹாஷிர். அருமையான நடிகர். மக்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும்" என்று ஐஸ்வர்யா கூறினார்.

இருப்பினும், சமூக ஊடகங்களில் இருப்பதால் கிடைக்கும் தொழில்முறை நன்மைகளை விட, அது தனது மனநலனைப் பாதிப்பதால் ஏற்படும் தனிப்பட்ட இழப்பு அதிகம் என்பதால், ஐஸ்வர்யா லட்சுமி அதிலிருந்து விலகுவதே சரி என்ற முடிவுக்கு வந்துள்ளார். "அந்தப் பக்கத்தையும் என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில், எனக்கு இது போதும் என்றாகிவிட்டது" என்றார்.