நீ தற்கொலை செய்துகொள்ளக் கூடாதா என்றும் கேட்கும் செய்திகள் தினமும் 100 வந்துகொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலீனா எலிசபெத் ஜோசப் என்ற போட்டியாளர் தான் தினமும் இணையவழி துன்புறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், தற்கொலை செய்துகொள்ள தன்னை தூண்டும் வகையில் பலர் பேசுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை போல் மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 28-வது நாளில் என்ட்ரி ஆன நிலீனா எலிசபெத் ஜோசப் 42-வது நாளில் வெளியேற்றப்பட்டார். ஆனால் தான் வெளியான நாளில் இருந்து இன்றுவரை இணையவழி துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.  

இது குறித்து வீடியோ வெளியிட்டு பேசியுள்ள நிலீனா எலிசபெத் ஜோசப், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சிரமங்களை எதிர்கொண்டதாலேயே வீடியோ வெளியிடுவது தாமதமானது. இப்போது பேசுவது அவசியம் என்று தோன்றியதால்தான் இந்த வீடியோவைப் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார். 

இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் அனுபவங்களைப் பற்றிப் பேசிய அவர், நான் வெளியே வந்தால் துப்புவோம் என்றும், நீ தற்கொலை செய்துகொள்ளக் கூடாதா என்றும் கேட்கும் செய்திகள் தினமும் 100 வந்துகொண்டு இருக்கிறது.“உங்களை நான் புண்படுத்தும் வகையில் ஏதேனும் செய்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எனது நிலைப்பாடுகளோ அல்லது செயல்களோ யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதன் பெயரில் தனிப்பட்ட முறையில் அவதூறுகளை எதிர்கொள்வது வேதனையளிக்கிறது. வலைதளங்களில் எனக்கு கருத்துகளை எழுதும்போது, மறுபக்கத்தில் இருப்பவர் உணர்ச்சிகள் உள்ள ஒரு மனிதர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கருத்துகளைக் கூறும்போது, இந்தப் பக்கம் இருக்கும் நானும் ஒரு மனிதன்தான். எனக்கும் வாழத் தகுதி இருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டு கருத்துத் தெரிவியுங்கள். நான் இதைச் சொல்வதால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடும் என்று நம்பவில்லை, இருந்தாலும் இது ஒரு கோரிக்கை என்று கண்கள் கலங்கியபடியே அவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த அனுபவங்களைப் பற்றியும் பேசிய நிலீனா, வெளியே இருந்து பார்வையாளர்களாக இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதும், நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக வாழ்வதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். நேரத்தைத் தெரிந்துகொள்ள முடியாமல் போனதும், சரியான நேரத்தில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் போனதும் மனரீதியாகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தியது.

சக போட்டியாளர் நோபியுடனான உறவைப் பற்றி வெளிப்படையாக பேசிய நிலீனா, பிக் பாஸ் வீட்டில் எனக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவாக (emotional support system) இருந்தது நோபிதான் அவர் மீது ஏற்பட்ட விருப்பம் உண்மையானது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து எதிர்கொள்ளும் அவதூறுகள்தான் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. 

போட்டியின் போது ஒருவரின் நிலைப்பாட்டோடு கருத்து வேறுபாடு கொள்ளத்தான் செய்யலாம். ஆனால் அதற்காக தற்கொலை செய்துகொள்ளச் சொல்வதும், பாலியல் அச்சுறுத்தல்களை விடுப்பதும் விமர்சனத்தின் எல்லையைத் தாண்டிய நடவடிக்கை. கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும்போது கூட, மறுபக்கத்தில் இருக்கும் நபரின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற நிலீனா வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.