வயிற்றுப் புற்றுநோய் என்பது இரைப்பைச் சுவரில் உள்ள செல்களில் கட்டுப்பாடற்ற முறையில் அசாதாரண கட்டிகள் உருவாகும் ஒரு தீவிர நோயாகும்.
மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வயிற்றுப் புற்றுநோய் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுவதற்கு வயது அதிகரிப்பு, புகைப்பிடித்தல், மது அருந்துதல், பாக்டீரியா தொற்று மற்றும் உணவுப் பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
மேலும், ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியா தொற்றும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
இதற்கு புகையூட்டப்பட்ட மீன், கோழி இறைச்சி மற்றும் தந்தூரி உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது ஒரு காரணமாக இருக்கலாம்.
இத்தகைய உணவுகளில் நைட்ரோசமைன்கள் போன்ற புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் இருப்பதால், வயிற்றின் உள் பகுதியை பாதிக்கக்கூடும்.
இந்நிலையில், வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
- குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவது.
- சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமாக இருப்பது.
- அடிக்கடி அஜீரணம் ஏற்படுவது.
- நெஞ்செரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் ஏற்படுவது பசியின்மை.
நோய் முற்றிய நிலையில் ஏற்படும் அறிகுறிகள்
- அதிகப்படியான நெஞ்செரிச்சல்.
- உணவு சாப்பிட முடியாத நிலை.
- பசியின்மை மற்றும் உடல் எடை குறைதல்.
- மலத்தில் ரத்தம் வெளியேறுதல்.
- கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்.
- வயிற்றில் நீர் சேருதல் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் மஞ்சள் காமாலை ஏற்படுதல்.

வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் வழிகள்
- அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை குறைக்க வேண்டும்.
- தினமும் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.
- வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
- உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும்.
