வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது, காலையில் பூண்டு சாப்பிடக்கூடாது, இரவில் தக்காளி சாப்பிடக்கூடாது, பால் குடித்தால் சளி பிடிக்கும் எனப் பல உணவுப் பழக்கங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் WhatsApp குழுக்களிலும் அடிக்கடி பகிரப்படுகின்றன.

இவற்றைப் பார்த்து பலரும் ஆரோக்கியமான உணவுகளைக்கூட சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால், இவ்வாறான நம்பிக்கைகளில் எவை உண்மை? எவற்றுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை? என்பது குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்பது பொதுவான தவறான நம்பிக்கையாகும். இதற்கு வலுவான அறிவியல் ஆதாரம் இல்லை. வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் உள்ளன. பெரும்பாலான ஆரோக்கியமானவர்கள் வாழைப்பழத்தை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.

பால் குடித்தால் சளி பிடிக்குமா?

பால் குடிப்பதால் சளி அல்லது சளித்தொற்று ஏற்படும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. சிலருக்கு பால் குடித்த பிறகு வாயில் கொழகொழப்பான உணர்வு ஏற்படலாம். இது பாலில் உள்ள புரதம் மற்றும் அதன் தன்மையால் ஏற்படக்கூடியது. சளி உருவாவதற்கும் பால் குடிப்பதற்கும் நேரடித் தொடர்பு இல்லை.

இரவில் தக்காளி, ஆரஞ்சு சாப்பிடக்கூடாதா?

தக்காளி, ஆரஞ்சு போன்றவற்றை இரவில் சாப்பிடக்கூடாது என்ற பொதுவான விதிமுறை இல்லை. இருப்பினும், அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இவ்வகை உணவுகள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம்.

உணவுகள் குறித்த சமூக வலைத்தளத் தகவல்களை அப்படியே நம்பாமல், அறிவியல் ஆதாரங்களையும் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் அடிப்படையாகக் கொண்டு உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது சிறந்தது.