நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திரத் தம்பதியாக வலம் வந்த ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியினர் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனைத் தொடர்புபடுத்தி பல்வேறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில், கெனிஷா தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

குறித்த மனுவில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேச கெனிஷாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் ஆர்த்தி கோரியுள்ளார். அத்துடன், அவதூறு கருத்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 1 கோடியே 1 இலட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மரியா கிளாட், சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி கெனிஷா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் அவர் ஆஜராகத் தவறினால், வழக்கு அன்றே விசாரித்து முடிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான பொது அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ரவி மோகன் - ஆர்த்தி இடையிலான பிரச்சினை தொடர்பாக இருவரும் பொதுவெளியில் ஒருவரையொருவர் விமர்சிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி ஊடகங்களைச் சந்தித்ததாக ரவி மோகன் மீது ஆர்த்தி தரப்பில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பொதுவெளியில் மன்னிப்புக் கோர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.