களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 803பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “களுத்துறையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், 18 பேர் கர்ப்பிணிகள் என்பதுடன், 9 பேர் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள்.
குறித்த தொற்றாளர்களில் 121பேர் ஹொரணை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், களுத்துறை- அகவலவத்தை பகுதியில் 23 பேரும், பண்டாரகம பகுதியில் 70 பேரும், புளத்சிங்கள பகுதியில் 41 பேரும், தொடங்கொட பகுதியில் 04 பேரும், பேருவளை பகுதியில் 77 பேரும், இங்கிரிய பகுதியில் 90 பேரும், களுத்துறை பகுதியில் 57 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, மதுராவல பகுதியில் 51 பேரும், மதுகம பகுதியில் 67 பேரும், மில்லனிய பகுதியில் 37 பேரும், பாலிந்தநுவர பகுதியில் 11பேரும், பாணந்துறை பகுதியில் 69 பேரும், வாத்துவ பகுதியில் 63 பேரும், வலல்லாவிட பகுதியில் 22 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 214 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை பதினொராயிரத்து 324 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 53 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.