கேரளாவை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 47). துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் துபாயில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டில் குழந்தைகள் படிப்பிற்காக தனது குடும்பத்தினரை ஊரிலேயே தங்க வைத்தார். சமீபத்தில் கேரளாவில் இருந்த தனது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளை 1½ ஆண்டுகளுக்கு பிறகு கோழிக்கோட்டில் இருந்து விசிட் விசாவில் அழைத்து வந்தார்.


இதில் குடும்பத்தினரை கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்று சுற்றி காட்டுவதற்கு திட்டமிட்டு சார்ஜாவில் வசிக்கும் தனது சகோதரர் குடும்பத்துடன் இணைந்து சார்ஜா-அஜ்மான் எல்லையில் உள்ள ஹீரா கடற்கரைக்கு சென்றார். அப்போது குடும்பத்தினர் கடலில் இறங்கி தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதில் எதிர்பாராதவிதமாக இஸ்மாயிலின் 3 மகள்களும், அவரது சகோதரரின் 2 குழந்தைகளும் கடல் நீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதனால் பதற்றமடைந்த அவர் கடலில் குதித்தார் அலையில் இழுத்து செல்லப்பட்ட 4 பேரை கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் தனது மூத்த மகளான அமல் (18) என்ற பெண்ணை மீட்க 2-வது முறையாக கடலில் குதித்தார். அப்போது பெரிய அலை வந்து அவரையும் சேர்த்து இழுத்து சென்றது.

கடலில் இழுத்து செல்லப்பட்டவர்களை மீட்க மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதில் விரைந்து வந்த போலீஸ், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் மீட்பு குழுவினர் இஸ்மாயிலையும் அவரது மூத்த மகளையும் தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இஸ்மாயில், அவரது மகள் அமல் பிணமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து சார்ஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.