கர்நாடக மாநிலம் பைண்டூரை சேர்ந்தவர்கள் அனுதீப் ஹெக்டே-மினுஷா காஞ்சன். அனுதீப் ஹெக்டே டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணராக உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த நவம்பர் 18-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் தேனிலவுக்கு செல்லும் முன் தங்கள் காதலை வளர்த்த சோமேஷ்வரா கடற்கரையை சுத்தம் செய்ய திட்டமிட்டனர்.
அந்த கடற்கரையில் குப்பை கூழங்கள், மதுபாட்டில்கள், கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. திருமணத்துக்கு பின்னர் அவர்கள் தினமும் சென்று கடற்கரையில் குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
ஆரம்பத்தில் இவர்களது பணியை அப்பகுதிக்கு பொழுதுபோக்க வந்தவர்கள் வேடிக்கையாக பார்த்து சென்றனர். பின்னர் இளைஞர்கள் சிலர் அவர்களோடு சேர்ந்து குப்பைகளை சேகரிக்க தொடங்கினர்.
அப்புறப்படுத்தப்பட்ட குப்பைகள் ஒரு இடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டன. இதை அறிந்த உள்ளாட்சி நிர்வாகம் அங்கு சென்று அவற்றை குப்பைகூடத்துக்கு அள்ளி சென்றது. 10 நாட்களிலேயே 600 கிலோ குப்பைகளை அகற்றிய புதுமண தம்பதி தற்போது அந்த கடற்கரை பகுதியை குப்பை இல்லாமல் பளிச் என மாற்றியுள்ளனர்.
