கேரளாவில் சிறை கைதிகளிடம் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது.
நீண்டகாலமாக சிறையில் இருப்பது பரோல் கிடைக்காதவர்கள், நோய்கள் மற்றும் மனநல பிரச்சினைகளால் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு கேரள சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக கேரள சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் அனைத்து சிறைகளிலும் கைதிகளின் மனஅழுத்ததை குறைக்கும் வகையில் காலை 6 முதல் இரவு 8 மணிவரை எப்.எம். ரேடியோவில் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் கைதிகள், அவர்களின் மனைவியருடன் எத்தனை முறையும் பேச அனுமதிக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வார, மாத இதழ்கள் கைதிகளுக்கு வழங்க வேண்டும். கைதிகள் தினமும் உடற் பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
தினமும் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் கைதிகள் நிற்பதை சிறைத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும். பேச விரும்பாதவர்களை பேசுமாறு ஊக்குவிக்க வேண்டும். வாரம் ஒரு முறை கைதிகளுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.
உதவி சிறைத்துறை அதிகாரி ஒருவரை நியமித்து கைதிகளுடன் உரையாட ஏற்பாடு செய்ய வேண்டும். சமூக நலத்துறை அதிகாரிகள் சிறைக்குச் சென்று கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
