மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 148 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
15,817 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,240 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 103 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது. 1,640 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 3,200 மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
முடிவுகள் தாமதமாவதால் நோய் பாதிப்பின் உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்தால் தான் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கும் நிலை ஏற்படும்.
ஆனால் மாவட்ட சுகாதாரத்துறை அது பற்றி அக்கறை கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை. விருதுநகர் பகுதியில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக அவருடன் பணியாற்றும் போலீசாருக்கும் தொடரில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை நடத்தி பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஆனாலும் இதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதே நிலைதான் பிற நிகழ்வுகளிலும் நடைபெறுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தூய்மைப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதன் மூலமே அவர்கள் நலன் பாதுகாக்கப்படுவதுடன் அவர்கள் மூலம் நோய் பரவாமல் இருக்கவும் வாய்ப்பு ஏற்படும்.