துபாயில் உள்ள இயற்கை வனப்பகுதி அல் மர்மூம். இந்த பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காடுகள் மற்றும் பாலைவன ஈர நிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அல் குத்ரா ஏரி மிகவும் பிரபலம் வாய்ந்ததாகும். சைக்கிள் பாதை, நடைபாதை, புகைப்படங்கள் எடுக்க வடிவமைப்புகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பகுதியில், பலர் அடிக்கடி சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில், துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அடிக்கடி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.

இந்தநிலையில், அவர் சமீபத்தில் அல் குத்ரா சைக்கிள் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிளில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது திடீரென்று 2 நெருப்புக்கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடின. இந்த காட்சியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில், பலர் நெருப்புக்கோழியுடன் பந்தயம் நடைபெற்றதுபோல இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நெருப்புக்கோழியானது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என்பது வியப்பூட்டும் தகவலாகும்.