தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்வது வழக்கம். வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், கிழக்கிலிருந்து தொடர்ந்து காற்று வீசுவதால் பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் இதுவரை ஜனவரி மாதம் பெய்த மழையின் அளவில் நேற்று பெய்த மழை தான் அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 1915 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் நேற்று அதிக அளவு மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
105 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் புழல் ஏரியில் இருந்து 1,500 கன அடி நீரும், பூண்டி ஏரியில் இருந்து 2,970 கனஅடி நீரும் நேற்று திறந்து விடப்பட்டது. மூன்று ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.