தியாகதுருகம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன்(வயது 42), விவசாயி. இவரது மகள் நாவுக்கரசி(வயது 15). இவர் விரியூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நாவுக்கரசி அவரது அக்காள் கவியரசி, தம்பி தேவா ஆகியோருடன் அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் அவர்கள் கிணற்றின் படிக்கற்களை பிடித்துக்கொண்டு குளித்தனர்.
அப்பொழுது திடீரென கைநழுவி கிணற்றின் மைய பகுதிக்கு சென்ற நாவுக்கரசி தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து 4 மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நாவுக்கரசியின் உடலை மீட்டனர்.
