நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் ஆனந்தராஜ்(வயது 27).
இவர் இன்று அதிகாலை மணிமுத்தாறு சாலையில் உள்ள செல்போன் டவரில் பெட்ரோல் கேனுடன் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு சென்ற போலீசார் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் 70 அடி உயர டவரில் ஏறி நின்ற ஆனந்தராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை பத்திரமாக கீழே இறக்கினர்.
மேலும் அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவரை கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கல்லிடைக்குறிச்சி பகுதியில் சம்சா வியாபாரம் செய்து வருகிறேன். ஒவ்வொரு ஊருக்கும் சென்று கடைகளுக்கு சம்சா சப்ளை செய்வேன். அப்போது சுத்தமல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் 2 பேரும் காதலித்து வருகிறோம். ஆனால் எங்கள் காதல் பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. அவரை திருமணம் செய்துத்தர மறுத்துவிட்டனர்.
இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன் என்றார்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.