நாடு முழுவதும் நேற்று முன்தினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்துள்ள விபரீதம் நடந்துள்ளது.

மராட்டியத்தின் யவத் மால் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அப்போது 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிடைசரை ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு டாக்டர் உள்பட 3 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா பன்சால் கூறும்போது, தவறுதலாக 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசரை கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர், சுகாதார பணியாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 12 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர் என்றனர். போலியோ சொட்டு மருந்து முகாமில் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொண்ட சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.