மும்பை அருகே உள்ள வாங்கனி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஒரு தாய் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய சிறுவன் பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்தான்.
மும்பை அருகே ரெயில் வந்து கொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை ரெயில்வே ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள வாங்கனி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் ஒரு தாய் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய அந்த சிறுவன் பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்தான்.
அந்த சிறுவன் தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயன்றான். அப்போது அந்த தண்டவாளத்தில ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் பிளாட்பாரத்தில் இருந்த அவனது தாய் பதறினார்.
ரெயில் மிக அருகே வந்து கொண்டிருந்தது. சிறுவனால் தண்டவாளத்தை விட்டு மேலே ஏற முடியவில்லை.
அப்போது ரெயில்வே ஊழியர் மயூர்ஷெல்கே என்பவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளம் வழியாக ஓடி வந்து கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றினார்.
அவரது இந்த துணிச்சலான செயலால்தான் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
சிறுவன் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதையும், ரெயில் வருவதும், அவனை ரெயில்வே ஊழியர் காப்பாற்றுவதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப்பார்த்த பலரும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனை காப்பாற்றிய ரெயில்வே ஊழியரின் துணிச்சலான செயலை பாராட்டி உள்ளனர்.
மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலும் அந்த ஊழியருக்கு பாராட்டு தெரிவித்தார். அவரது செயல் பெருமை அளிக்கும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.