கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவது சிக்கலை ஏற்பாடுத்தும் என்பதால், புதிய மருத்துவர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஏற்ற வகையில் புதிய மருத்துவர்களை நியமிக்காமல், ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவது சிக்கலை உருவாக்கும். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் 4,368 படுக்கைகள் உள்ளன.
இவற்றில் இப்போது 3,444 பேர் மருத்துவம் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவம் அளிக்க குறைந்த எண்ணிக்கையில்தான் மருத்துவர்கள் உள்ளனர். இதனால் 6 மணி நேரம் பணியாற்றும் ஒரு மருத்துவர் 60 முதல் 80 நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. ஒரு மருத்துவர் ஓய்வே இல்லாமல் சிகிச்சை அளித்தால் கூட ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 14 பேருக்கு மருத்துவம் அளிக்க வேண்டும். இதனால் மருத்துவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையைப் போக்க அதிக எண்ணிக்கையில் தற்காலிகமாக மருத்துவர்களை கூடுதலாக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, புதிய மருத்துவர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது. 3,52,991 பேருக்கு புதிதாகத் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்ணறியப் பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 2,812 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதேபோல தமிழகத்திலும் நோய் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ஒரேநாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,97,672 ஆக அதிகரித்து இருக்கின்றது. 1,07,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>