நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்த டுனெடின் நகரில் பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்று உள்ளது.
இந்த நிலையில், இந்த விற்பனை அங்காடியில் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர்.
இதில், 4 பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். பொதுமக்கள் ஒருவரை பிடித்து வைத்து உள்ளனர். அவர் கத்தி குத்து தாக்குதலை நடத்திய நபராக இருக்க கூடும் என போலீசார் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. எனினும், அவரது அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்தில் அந்த நபரும் காயமடைந்து உள்ளார். அவர் உள்பட படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அந்த விற்பனை அங்காடியில் பணிபுரியும் 2 ஊழியர்களும் காயமடைந்தவர்களில் அடங்குவர். இந்த சம்பவத்தில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் நடந்ததற்காக காரணம் பற்றி போலீசார் எதுவும் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.