எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது. இந்த இயற்கை நம்மிடமிருந்து ஒன்றை பறிக்கிறது என்றால் மனம் தளராமல் அதை கொடுக்கும் மனநிலையில் இருக்கவேண்டும்.
ஏனென்றால் அதைவிட சிறந்த ஒன்றை அது நமக்கு கொடுக்க போகிறது என்றே அர்த்தம். இதை மறந்து எதாவது ஒன்று நாம் நினைத்தபடி நடக்கவில்லை.
ஏதாவது ஒன்றை நாம் இழந்துவிட்டோம் என்பதற்காக மனம் தளர்ந்து நம் உயிரை நாமே மாயித்துக் கொள்ளவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
இந்த முட்டாள்தனத்தை தான் ஆண்டுதோறும் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
உலக சுகாதார தாபனத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒரு தற்கொலை இடம்பெறுகிறது.
நாள் தோறும் 3000 பேர் வரை தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். இதன் அடிப்படையில் ஆண்டும்தோறும் சராசரியாக 8லட்சம் தற்கொலைகள் இடம்பெறுவதாக சர்வதேச சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுகிறது.
தற்கொலைகள் உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதனை தடுக்கும் நோக்கிலேயே சர்வதேச சுகாதார தாபனத்தினால் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் திகதி தற்கொலை தடுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
தற்கொலைகளை தடுக்கும் முகமாகவும் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலும் இத் தினத்தை சர்வதேச சுகாதார தாபனம் 2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆரம்பித்து வைத்தது. தற்கொலைகளுக்கான காரணங்களின் பட்டியலின் அடிப்படையில் 90 சதவீதம் தற்கொலைகளுக்கு மன அழுத்தம் காரணமாக அமைகிறது.
தற்காலத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் இது குறித்து போதிய அறிவின்மையே காணப்படுகிறது.
குறிப்பாக போதை பொருட்களின் அதிகரித்த பாவனை அதிகரித்த வேலைபளு, நெருங்கிய உறவுகளின் திடீர் பிரிவு அல்லது திடீர் மரணம், பரீட்சை பற்றிய பயம், அதிகரித்த கல்வி சுமை, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியமை.
மற்றும் தவறான பாலியல் நடத்தைகள், வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள், தூக்கமின்மை, சமூகவலைத்தளங்களின் அதிகரித்த பாவனை போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
இவ்வாறான மனஅழுத்தம் ஆரம்பகட்டத்தில் இருக்கும் பொழுது எந்த விடயத்திலும் அக்கறையின்மை, பசியின்மை, தூக்கமின்மை, எதிர்காலம் பற்றிய பயம் அல்லது எதிர்காலம் குறித்து அக்கறையற்ற தன்மை, குழப்பம் போன்றன ஏற்படுகிறது.
இவ்வாறான உணர்வுகள் நாளிடைவில் தற்கொலை எண்ணங்களை தோற்றுவிக்கிறது. இதனை தடுக்க சிறந்த உளவளத்துணையின் உதவியை நாடுதல் அவசியமாகிறது.
ஆனால் இதுகுறித்து மக்கள் மத்தியில் இன்னும் தெளிவின்மையே நிலவுகிறது. உளவளத்துணை என்றால் என்ன? அதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிபூட்டப்படுவது அவசியம்.
இது குறித்து அறிந்தவர்களும் கூட மன அழுத்தம் குறித்து உளவளத்துணையிடம் ஆலோசிப்பதில்லை.
உளவளத்துணையின் உதவியை நாடுவதால் தன்னை உளக்கோளாறு உடையவானாக சமூகத்தவர் நினைப்பார்கள் என்ற அச்சம் காரணமாக இதனை தவிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறான சிந்தனை. காய்ச்சல், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்று மன அழுத்தமும் ஒரு நோய் தான்.
இதில் வெட்கப்படவோ, தயக்கம் காட்டவோ அவசியமில்லை. மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக உணர்ந்தால் ஆரம்ப கட்டத்திலேயே உளவளத்துணையின் உதவியை நாடுவதன் மூலம் இலகுவில் மனதை சீர்செய்யலாம் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்க்கலாம்.
முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டபோட்டி வைத்தால் முயலும் வெற்றியடையலாம் ஆமையும் வெற்றியடையலாம் ஆனால் முயளாமையே வெற்றியடையாது. தனக்கு தேவையானதை போராடி பெற துணிவில்லாதவர்கள் அது கிடைக்கவில்லையே என மனம் வருந்த தகுதியற்றவர்கள்.
நூறாவது அடியில் ஒரு கல் உடைகிறது என்றால் அதற்கு முன்னாள் அடித்த 99 அடிகளும் வீண் என்று அர்த்தம் கிடையாது "வெற்றி என்பது இலக்கு அல்ல அது தொடர் முயற்சியின் பயணம்" இதை புரிந்து கொண்டாலே போதும் நாம் மனஉழைச்சல்கள் அனைத்தையும் தாண்டி போராட ஒரு துணிவு பிறக்கும். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.