குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஆரோக்கியமும், வலிமையும் சேர்க்கும் கஞ்சிகள் பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கஞ்சிகள் தயாரிப்பது மிகவும் எளிமையானதாகும். இந்த உணவை காலை மாலை எப்போது வேண்டுமானாலும் தயா செய்து சாப்பிடலாம். இதனால் உடலின் உள்ளுறுப்புகளுக்கும், வெளிப்புற செயல்பாட்டிலும் முக்கிய பங்களிப்பை தரும் பன்முக தன்மை கொண்டிருக்கும்.
அந்த வகையில் உடலுக்கு வலுவூட்டும், ஆரோக்கிய நன்மைகளை தரும் சில கஞ்சி வகைகளை எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.
தினை அரிசி கஞ்சி
தேவையான பொருள்கள்
- தினை அரிசி - 1 கப் (2-3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தது)
- நெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
- நறுக்கிய பிஸ்தா - 2-3 டீஸ்பூன்
- நறுக்கிய பாதாம் - 2-3 டீஸ்பூன்
- நறுக்கிய முந்திரி பருப்பு - 2-3 டீஸ்பூன்
- நறுக்கிய அக்ரூட் பருப்புகள் - 2-3 டீஸ்பூன்
- பால் - 3 கப்
- நறுக்கிய வெல்லம் - அரை கப்
- இலவங்கப்பட்டை தூள் - கால் டீஸ்பூன்
- பச்சை ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
- வாழைப்பழங்கள் - அலங்கரிப்பதற்கு ஏற்ப
- ஸ்ட்ராபெர்ரிகள் - அலங்கரிப்பதற்கு ஏற்ப
- விதைகளின் கலவை - சிறிது அளவு
- புதினா இலைகள் - சிறிது அளவு
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் நய் ஊற்றி அது சூடாகியதும் தினை அரிசியை சோத்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். இதன் பின்னர் இரண்டரை கப் சூடான நீரை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை மூடி 8-10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர், 10-15 நிமிடங்கள் ஆற வைக்கவும். பின்னர் இந்த கலவையில் பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட், பால் சேர்த்து சேர்த்து நன்கு கலக்கவும்.
அதன் பிறகு 4-5 நிமிடங்கள் சமைத்து, வெல்லம் சேர்த்து கரையும் வரை வதக்கவும். பின்னர் இலவங்கப்பட்டை தூள், பச்சை ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கிய பின் பரிமாறலாம் தேவைப்பட்டால் இந்த கங்சியின் மேல் வாழைப்பழத் துண்டுகள் மற்றும் ஸ்ட்ராபெரி துண்டுகளை அடுக்கி சாப்பிடலாம்.
ராசவள்ளி கிழங்கு கஞ்சி
தேவையான பொருள்கள்
- ராசவள்ளி கிழங்கு - 400 கிராம்
- நெய் - 3 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு நறுக்கியது - 6-8
- கருப்பு திராட்சைகள் - 8-10
- உப்பு - ஒரு சிட்டிகை
- சர்க்கரை - முக்கால் கப்
- பச்சை ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
- ஜாதிக்காய் தூள் - கால் டீஸ்பூன்
- தேங்காய் பால் - 1 கப்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி அதில் ராசவள்ளி கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி 15-20 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பின்னர் அதை ஆற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸியில் கிழங்கை மாற்றி, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கி முந்திரி, கருப்பு திராட்சை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இதை இறக்கி தனியாக வைக்கவும். இதே பாத்திரத்தில் விழுதாக அரைத்த கிழங்கை 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் உப்பு, சர்க்கரை, பச்சை ஏலக்காய் தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை கரையும் வரை சமைத்து, தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வரை சமைக்கவும்.இதன் பின்னர் தேவைப்பட்டால் முந்திரி மற்றும் திராட்சையை மேலால் போட்டு பரிமாறலாம்.