பண்டிகை வந்தாலே, இந்திய இல்லங்களில் கொண்டாட்டம் களைக்கட்டி விடும். அதிலும் குறிப்பாக தீபாவளி சமயங்களில் குடும்பங்கள் ஒன்றாக கூடி, பட்டாசு வெடித்து மகிழ்வர். அதேபோல் தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்கும் பல வைகயான பலகாரங்களுக்கும் பஞ்சமே இருக்காது.
இந்த தினம் வந்துவிட்டாலே பட்டாசுகளுக்கும், பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதே சமயத்தில் பலர் தீபாவளியன்று கோயில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதையும் வழக்கமாக கொண்டிருப்பர்.
தீபாவளி பண்டிகை எப்போதும் கங்கா ஸ்நாதனத்துடன் தான் துவங்க வேண்டும் என்பது ஐதீகம். தீபாவளியன்று அனைவரும் கங்கையில் நீராட முடியாது என்பதால், வீட்டிலேயே கங்கா ஸ்நானம் செய்து அதன் பலனைப் பெறுவதற்கும், பண்டிகையைத் துவங்குவதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் கங்கா ஸ்நானம் செய்வதற்கு: தீபாவளி தினத்தில் அதிகாலை நேரத்தில், நாம் நீராடும் நீரில் கங்கையானவள் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால், அன்று எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தாலே கங்கையில் குளித்த பலன் கிடைக்கும். கங்கா ஸ்நானம் செய்வதற்கு உகந்த நேரம் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் ஆகும் (பொதுவாக அதிகாலை 4:00 மணி முதல் 5:30 மணிக்குள்).
புத்தாடை உடுத்த நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7:15 மணி வரை காலை 9 மணி முதல் 10:15 மணி வரை
எண்ணெய் குளியல் முறை: நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, நல்லெண்ணெயை உடலிலும் தலையிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும் (சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் ஊற வைக்கத் தேவையில்லை). அதன் பிறகு, வெதுவெதுப்பான/சுடுநீரில் (வெந்நீரில்) மட்டுமே குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.
தலைக்குச் சீயக்காய் அல்லது நலுங்கு மாவு போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நீராடுவது நல்லது. இந்த முறையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், நம்முடைய பாவங்கள், கர்ம வினைகள் குறையும் என்றும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தீபாவளி பண்டிகையைத் துவக்கும் முறை: கங்கா ஸ்நானம் முடித்த பிறகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் புத்தாடை உடுத்த வேண்டும். புத்தாடை அணிந்த பிறகு, முதலில் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும். வீட்டின் பூஜை அறையைச் சுத்தம் செய்து, கங்கை நீர் அல்லது சுத்தமான நீரைத் தெளித்து, விநாயகர் மற்றும் லட்சுமி தேவி சிலைகளை வைத்து வழிபட வேண்டும்.
விளக்குகள் ஏற்றி (அகல் விளக்குகள் ஏற்றி வைப்பது மிகவும் உகந்தது), இனிப்புகள், பலகாரங்கள், பூக்கள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் விநாயகர், லட்சுமி தேவி ஆகியோரை வணங்குவது விசேஷமானது. பூஜை முடிந்த பின், இனிப்பு மற்றும் பலகாரங்களை உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டாருடன் பகிர்ந்து உண்டு மகிழ வேண்டும். அதன் பிறகு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடலாம்