Chia Seeds Vs Sabja Seeds: கோடைக்காலம் வந்துவிட்டாலே உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் சூடு, மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் உட்பட ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை வரிசையாக சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் ஏராளமான உணவுகள் உள்ளன. அதில் பிரபலமானது இளநீர். ஆனால் இந்த இளநீரைத் தவிர வேறுசில உணவுப் பொருட்களும் கோடைக்கால பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக அளவில் சிறியதாக இருக்கும் ஒருசில விதைகள் பெரிதும் உதவி புரியும்.
இந்த விதைகள் குட்டியாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக நிறைந்துள்ளன. அப்படி கோடையில் பெரும்பாலான மக்களால் எடுக்கப்படும் இரண்டு விதைகள் உள்ளன. அவை சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள். இவ்விரண்டும் மற்ற விதைகளை விட பார்க்க அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் இவை ஏராளமான நார்ச்சத்துக்களைக் கொண்டவை மற்றும் உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
இருப்பினும் பெரும்பாலானோருக்கு இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் இவற்றில் எது மிகவும் சிறந்தது என்ற ஒரு கேள்வி மனதில் இருக்கும். எனவே டாக்டர் இளவரசி லட்சுமணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகளுக்கு இடையிலான வித்தியாசத்தையும், அவற்றின் நன்மைகளைப் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
சியா விதைகளின் நன்மைகள்
- சியா விதைகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஒமேகா-3 அதிகளவில் உள்ளது.
- உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் சியா விதைகள் மிகவும் நல்லது. ஏனெனில் இதை சிறிய அளவில் உட்கொண்டாலும், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும்.
- இது தவிர, இந்த விதைகளில் நார்ச்சத்தும், புரோட்டீனும் அதிகமாக உள்ளன. 100 கிராம் சியா விதைகளில் 34 கிராம் நார்ச்சத்து உள்ளது." என்று கூறினார்.

சியா விதைகளில் உள்ள நார்ச்சத்தின் முக்கிய விளைவுகள்
- "சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்தும்.
- மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும்.
- நீண்ட நேரம் வயிற்றை நிரப்பியிருக்க செய்யும்.
- இரத்த சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும்.
- குடல் பாக்டீரியாக்களுக்கு ஆதரவாக இருக்கும்.
- முக்கியமாக கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்" என்றும் கூறியிருந்தார்.

சப்ஜா விதைகள்
- "சப்ஜா விதைகளிலும் நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் சப்ஜா விதைகளில் 25 கிராம் நார்ச்சத்து உள்ளது.
- ஆனால் இந்த விதைகள் அதிக குளிர்ச்சி பண்பைக் கொண்டது. எனவே அசிடிட்டி அல்லது செரிமான தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த விதைகளை எடுக்கும் போது, வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
- மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும் மற்றும் உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.
- இந்த விதைகளை கோடைக்காலத்தில் குடிக்கும் சர்பத் மற்றும் பிற பானங்களுடன் ஊற வைத்து சேர்த்து உட்கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
- முக்கியமாக சியா விதைகளை விட சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்தால், 10 நிமிடத்தில் சாப்பிட தயாராகிவிடும்." என்னும் கூறினார். எனவே நண்பர்களே! இவ்விரு விதைகளுமே உடலுக்கு நன்மைகளை தரக்கூடியவை. ஆனால் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சிறந்தது என்றால் அது சப்ஜா விதைகள் தான். எனவே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் சப்ஜா விதைகளையும், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சியா விதைகளையும் எடுக்கலாம்.
