பொதுவாக நமது முன்னோர்கள் பின்பற்றிய சாஸ்திர சம்பிரதாயங்களாக இருந்தாலும், வாழ்க்கை முறைகளாக இருந்தாலும், உணவுப் பழக்கங்களாக இருந்தாலும், அவற்றின் பின்னால் ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணங்கள் இருக்கும்.
அத்தகைய பாரம்பரிய மரபுகளில் ஒன்றாகக் கருதப்படும் கடுக்காயை உடல் எடையை குறைபக்க பயன்படுத்தலாமா? அதனை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும், கடுக்காயின் ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கடுக்காயின் மருத்துவ நன்மைகள்
கடுக்காயில் காணப்படும் கேலிக் அமிலம் மற்றும் பிற உயிர்ச் செயற்பாட்டு மூலக்கூறுகள், கொழுப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே கொழுப்பு அதிகரிப்பு பிரச்சினை உள்ளவர்கள் தினசரி சிறிய அளவில் கடுக்காய் பொடியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும், இதில் உள்ள சபோனின் (Saponin) போன்ற சேர்மங்கள் உடலில் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவுவதாகக் கருதப்படுகின்றன. இதனால் உடல் எடையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு கடுக்காய் ஒரு நல்ல இயற்கைத் துணையாக அமையலாம்.

கடுக்காயில் அதிக அளவு துவர்ப்புச் சுவை இருப்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.தினமும் இரவு உணவுக்குப் பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து 3 கிராம் அளவு கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தினால்,இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவலாம்.
மலச்சிக்கல் பல வயிற்று உபாதைகளுக்குக் காரணமாக அமைகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கடுக்காய் சிறந்த துணையாக செயல்படுகிறது. குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கடுக்காயை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையை சமநிலைப்படுத்த உதவும் பண்புகளும் கடுக்காயில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பெருங்குடல் தொடர்பான சில அசௌகரியங்களுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடும்.
சிறுநீர் பாதை தொற்றுகள், சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சிரமங்கள் போன்ற பிரச்சினைகளுக்கும் கடுக்காய் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிறுநீர்ப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதாக நம்பப்படுகிறது.
கடுக்காயில் உள்ள டானிக் அமிலம் (Tannic Acid) காரணமாக, வாய்ப்புண் மற்றும் வாய் தொடர்பான சில பிரச்சினைகளுக்கு இதை வாய்க் கொப்பளிப்பாகப் பயன்படுத்தலாம். சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டால், கடுக்காய் தூளை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது காயம் ஆறுவதற்கு உதவக்கூடும்.

மேலும், இரத்தம் விரைவாக உறைவதற்கும் இது துணைபுரியும் என்று பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. பித்தம் மற்றும் வாதம் சார்ந்த உடல் தன்மை கொண்டவர்களுக்கு வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கடுக்காய் உதவக்கூடும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.
மேலும், இதய ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் கடுக்காய் பங்கு வகிக்கக்கூடும். தினசரி சுமார் 3 கிராம் அளவில், மருத்துவரின் ஆலோசனையுடன் தொடர்ந்து பயன்படுத்தும் போது, இதய நோய்களுக்கு வழிவகுக்கும் சில அபாயக் காரணிகளைக் குறைக்க உதவலாம்.
