health benefits of cinnamon : நமது சமையலறையில் மணத்திற்காக பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை, உணவின் சுவையையும் நறுமணத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இலவங்கப்பட்டை, இன்று நவீன மருத்துவ ஆய்வுகளாலும் பல நன்மைகள் கொண்ட இயற்கை மூலிகையாகக் கருதப்படுகிறது.
இலவங்கப்பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம், கால்சியம், மாங்கனீஸ், நார்ச்சத்து மற்றும் சிறிதளவு புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், இதில் அதிகளவில் காணப்படும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினசரி உணவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஆரோக்கிய நன்மைகள்
இலவங்கப்பட்டையில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் தேவையற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது குறையும். மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) சீராக செயல்படச் செய்து, உடல் எடையைக் குறைக்க உதவக்கின்றது.
இலவங்கப்பட்டை செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வயிற்றுப்பெருக்கு, அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளை குறைப்பதுடன், உடலில் தேங்கியுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது.

டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுவதோடு, இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தவும், உடலில் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இதனை பயன்படுத்துவது சிறந்தது.
இலவங்கப்பட்டையில் உள்ள இயற்கையான கிருமி எதிர்ப்பு பண்புகள், நுரையீரலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற உதவுகின்றது.
இலவங்கப்பட்டையில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்கள், உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்தை குறைக்க உதவுகின்றன. இதனால் அல்சைமர், பார்கின்சன் போன்ற சில நரம்பியல் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலவங்கப்பட்டை இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை கட்டுப்படுத்தி, வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாகவே பல பற்பசைகள் மற்றும் பற்பொடிகளில் இலவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது.
இலவங்கப்பட்டையில் பல நன்மைகள் இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு மருந்துகளை பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
