சென்னை: தமிழ் சினிமாவில் சில கூட்டணிகளை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. குறிப்பாக 90-களில் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஹீரோ - ஹீரோயின் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது என்றாலே, பழைய நினைவுகள் மீண்டும் எட்டிப் பார்க்கும். அந்த வகையில் நடிகர் பிரபு மற்றும் நடிகை சுகன்யா இருவரும் சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.
பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மேரிகோல்ட்' திரைப்படத்தில்தான் இந்த கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. இப்படத்தில் ரக்ஷன், நமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரபு - சுகன்யா இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
90ஸ் ரசிகர்களுக்கு தெரிந்த கூட்டணி: பிரபு - சுகன்யா என்றதும் 90-களில் இவர்களது படங்களை பார்த்த ரசிகர்களுக்கு பல நினைவுகள் இருக்கும். இருவரும் இணைந்து நடித்த படங்களில் 'செந்தமிழ்ப் பாட்டு' முக்கியமானது. 1992-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். குடும்ப உணர்வுகள், காதல் என அந்த காலகட்டத்திற்கு ஏற்ற கதையம்சத்துடன் வெளியான இப்படத்தில் பிரபு - சுகன்யா கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

அதன்பிறகு 1993-ம் ஆண்டு வெளியான 'சின்ன மாப்பிள்ளை' படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். சந்தான பாரதி இயக்கிய இந்த படமும் அந்த காலகட்டத்தில் கவனம் பெற்றது. அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் நடிக்கின்றனர்.
பிரபுவுக்கு இது முக்கியமான படம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான காலம் முதலே தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 'அக்னி நட்சத்திரம்', 'சின்ன தம்பி', 'செந்தமிழ்ப் பாட்டு', 'டூயட்', 'மலையாளப் படமான காலாபாணி' என பல்வேறு படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
குறிப்பாக பி.வாசு இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான 'சின்ன தம்பி', பிரபுவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் நடித்த அப்பாவித்தனமான கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. கதாநாயகனாக மட்டுமின்றி, தற்போதைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் பிரபு. அந்த வகையில் 'மேரிகோல்ட்' படத்திலும் அவரது கதாபாத்திரம் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய கூட்டணி.. புதிய தலைமுறை: இந்த படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு பக்கம் 90-களின் பிரபலமான பிரபு - சுகன்யா கூட்டணி. மறுபக்கம் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த ரக்ஷன் உள்ளிட்ட நடிகர்கள். இதனால் பழைய தலைமுறையையும் புதிய தலைமுறையையும் இணைக்கும் படமாக 'மேரிகோல்ட்' உருவாகி வருகிறது.
31 ஆண்டுகளுக்கு முன்பு திரையில் இணைந்து ரசிகர்களை கவர்ந்த பிரபு - சுகன்யா, இப்போது மீண்டும் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வரப்போகிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி, படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
