பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்ததால், யாஷின் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் இன்னும் விற்கப்படாமல் உள்ளன. ஒரு அறிக்கையின்படி, தயாரிப்பாளர்களுக்கு ரூ. 300 கோடி நஷ்டம் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.

யஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் திரையரங்க வசூல் நிறைவடையும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஒடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

இந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட  படங்களில் ஒன்றாக இருந்தது டாக்ஸிக் திரைப்படம். இதற்கு முக்கிய காரணம், கே.ஜி.எப், மற்றும் கே.ஜி.எப் 2 என 2 மெகாஹிட் படங்களை கொடுத்த யஷ் அடுத்து நடித்துள்ள படம் என்பதால் இந்த எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் கீத்து மோகன்தாஸ் இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கேங்ஸ்டர்  திரைப்படம், முதல் நாளில் திரையரங்குகளில் மிகப்பெரிய தொடக்க வசூலைப் பெற்றது. ஆனால், படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களிடையே பரவிய எதிர்மறையான கருத்துகள் காரணமாக, அதன் வசூல் அடுத்தடுத்த நாட்களில் கடுமையாக சரிந்தது. செப்டம்பர் 11-ந் தேதி புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், டாக்ஸிக் வசூல் இத்துடன் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டாக்ஸிக் படத்தின் டிஜிட்டல் உரிமைகளின் மதிப்பும் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, வெளியீட்டுக்கு முன்பு ரூ.150 கோடி வரை ஓ.டி.டி உரிமைக்காக முன்மொழிவு கிடைத்திருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஓ.டி.டி நிறுவனம் வெறும் ரூ.30 கோடி மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டாக்ஸிக் படக்குழுவுக்கு முன்னணி ஓ.டி.டி தளத்திடமிருந்து ரூ.150 கோடி வழங்கும் முன்மொழிவு கிடைத்தது. ஆனால், படக்குழு தரப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமான தொகை எதிர்பார்க்கப்பட்டது. யஷ், இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். அதன்மூலம், திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகான ஓ.டி.டி உரிமைகளின் விலை ரூ.200 கோடிக்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் எதிர்மாறாக உள்ளது.

அனைத்து மொழிகளிலும் படத்தை திரையரங்குகளுக்குப் பிறகு ஸ்ட்ரீமிங் செய்வதற்கான டிஜிட்டல் உரிமைகளுக்கு ஓ.டி.டி நிறுவனங்கள் ரூ.30 கோடி வரை குறைந்த தொகையை மட்டுமே வழங்க முன்வருகின்றன. டாக்ஸிக் திரைப்படத்தின் கதை சொல்லும் முறை வயது வந்தோருக்கானதாக இருப்பதால், ஓ.டி.டி ரிலீஸ்காக படத்தின் வேறுபட்ட பதிப்பை உருவாக்க தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த வட்டாரம் மேலும் கூறுகையில், தற்போது கையில் இருக்கும் தொகையைவிட அதிகமான தொகையைப் பெறும் நோக்கில், டிஜிட்டல் வெளியீட்டிற்காக முற்றிலும் புதிய எடிட்டிங் செய்யப்பட்ட பதிப்பை உருவாக்க தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். நஷ்டத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றாக, ஓ.டி.டி ரிலீஸ்காக படத்தைப் புதிதாக எடிட் செய்வதும் பரிசீலனையில் உள்ளது.

திரைப்படத்தைச் சுற்றி எதிர்மறையான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், டிக்கெட் முன்பதிவு தளமான புக் மை ஷோவில்-வில் ‘டாக்ஸிக்’ படத்திற்கான மதிப்பீடு நீக்கப்பட்டுவிட்டதாக ரெட்டிட் (Reddit) பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேடல் முடிவில் முன்னும் பின்னுமாக இருந்த நிலையை காட்டும் இரண்டு ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்த அந்தப் பயனர், புக் மை ஷோவில்-வில் ‘டாக்ஸிக்’ படத்தின் மதிப்பீடு மிகவும் மோசமாக இருந்ததால், அதை தற்போது நீக்கிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில் திரைப்படத்திற்கு 5.5/10 என்ற மதிப்பீடு காணப்பட்டது. ஆனால், தற்போது காட்டப்படும் பதிப்பில் மதிப்பீட்டிற்குப் பதிலாக படத்திற்கு கிடைத்துள்ள லைக்குகளின் எண்ணிக்கை மட்டுமே இடம்பெற்றுள்ளது. சாக்னில்க் (Sacnilk) வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தியாவில் இதுவரை ரூ.243.40 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. இந்திய அளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.290.50 கோடியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.