சென்னை: ஸ்டூடன்ட் நம்பர் 1 மூலம் அறிமுகமாகி கோவை பிரதர்ஸ், வெற்றிவேல் சக்திவேல், என தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ். அரசியலில் தந்தை சத்யராஜ் மற்றும் சகோதரி திவ்யா சத்யராஜ் ஆகியோர் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் போது, சிபிராஜ் மட்டும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார். தற்போது, சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மிகவும் நெகிழ்ச்சியான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி, வாழ்த்துகளை குவித்து வருகிறது.
சத்யராஜ் பேரன்: நடிகர் சிபி ராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு ரேவதி என்பவர திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தீரன் மற்றும் சமரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தீரன், சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற 'ISSO Games 2026-27' சர்வதேச டேக்வாண்டோ (Taekwondo) போட்டியில், சிபிராஜின் மகன் தீரன் அபாரமாக விளையாடி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

சிபிராஜின் பதிவு: தன் மகன் தங்கம் வென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள சிபிராஜ், என் மகன் தீரன் தங்க பதக்கம் வென்ற செய்தியைப் பகிர்வதில் அளப்பரிய மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இதை சாத்தியமாக்கிய பயிற்றுநர் உ தயா லீ மற்றும் வாய்ப்பளித்த எங்களது சிவ நாடார் பள்ளிக்கும் மனமார்ந்த நன்றிகள் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகர்களாக இருக்கும் தாத்தா சத்யராஜ் மற்றும் அப்பா சிபிராஜ் இருவரையும் தாண்டி, விளையாட்டு துறையில் சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ள குட்டி தீரனுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் மழையாக பொழிந்து வருகின்றன. சிபிராஜ் கடைசியாக 'டென் ஹவர்ஸ்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் தனது அப்பாவுடன் இணைந்து ஜாக்சன் துரை: தி செகண்ட் சேப்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
