படத்தின் முன்பதிவு நேரம் இன்னும் முடிவடையாததால், சாதனைகளை முறியடிக்க ஜெயிலர் 2 படத்திற்கு இன்னும் அவசாகம் உள்ளது. 

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படம் தமிழகத்தில் முன்பதிவில் ரூ10 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுளளது. முன்பதிவில், சென்னை முதலிடத்தில் உள்ளது. 

ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் 'லியோ' மற்றும் 'கோட்' (GOAT) போன்ற சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்களின் சாதனைகளை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயிலர் 2 படத்திற்கான முன்பதிவு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முன்பதிவு நேரம் இன்னும் முடிவடையாததால், சாதனைகளை முறியடிக்க ஜெயிலர் 2 படத்திற்கு இன்னும் அவசாகம் உள்ளது. 

இது குறித்து திரைப்பட வசூல் கண்காணிப்புத் தளமான சாக்னில்க் (Sacnilk) வெளியிட்டுள்ள முதல் நாள் முன்பதிவு அறிக்கையின்படி, 'ஜெய்லர் 2' தமிழ்நாட்டில் 'பிளாக் சீட்களையும்' (Block seats) சேர்த்து ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. சுமார் 3,300-க்கும் மேற்பட்ட காட்சிகளுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட காட்சிகள் ஏற்கனவே 'ஹவுஸ்ஃபுல்' ஆகிவிட்டன. கடைசி நேர முன்பதிவுகள் இன்னும் மீதமுள்ளதால், முதல் காட்சி தொடங்குவதற்குள் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 'ஜெய்லர் 2' படத்தின் முதல் நாள் முன்பதிவு வசூலில் சென்னையில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட காட்சிகளில் 'பிளாக் சீட்களையும்' சேர்த்து ரூ. 4.80 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது. கோவை மண்டலம் ரூ. 1 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், திருச்சி மற்றும் மதுரையிலும் முன்பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்பு தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களுக்கும் நீண்டுள்ளது. 

இந்திய அளவில், 'ஜெய்லர் 2' முதல் நாளில் 'பிளாக் சீட்களுடன்' சேர்த்து ரூ. 21 கோடிக்கு மேலும், 'பிளாக் சீட்கள்' இன்றி ரூ. 18 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளது. முதல் நாளுக்காக இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளாவில் ரூ. 4.50 கோடிக்கு மேலும், கர்நாடகாவில் ரூ. 4 கோடிக்கு மேலும் வசூலாகியுள்ளது. 

ஜெயிலர் 2 தமிழ்நாடு முன்பதிவில் ரூ. 10 கோடி வசூலைக் கடந்திருந்தாலும், சமீபத்திய முன்னணித் தமிழ் படங்களின் முதல் நாள் இறுதி முன்பதிவு வசூலை ஜெயிலர் 2 இதுவரை எட்டவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை முன்பதிவில் 2023-ம் ஆண்டு வெளியான விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 19.57 கோடியுடன் முதலிடத்திலும், 2024-ம் ஆண்டு வெளியான விஜயின் கோட் திரைப்படம் 15.60 கோடி வசூலுடன் 2-வது இடத்திலும் உள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் 15.43 கோடி வசூலுடன் 3-வது இடத்திலும், விஜயின் ஜன நாயகன் 13.88 கோடியுடன் 4-வது இடத்திலும், ரஜினியின் வேட்டையன் 12.63 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளது. ஜெயிலர் 2 தற்போது 6-வது இடத்தில் உள்ள நிலையில், படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் உள்ளதால் அட்வான்ஸ் புக்கிங்கில் புதிய சாதனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜெய்லர் 2' படம் 2023-ம் ஆண்டு வெளியாக ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் மீண்டும் களம் இறங்குகிறார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் புதிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.