துணி துவைக்கும் இயந்திரத்தில் குறைவான துணிகளைக் கொண்டு அடிக்கடி இயக்குவதற்குப் பதிலாக, போதுமான துணிகள் சேர்ந்ததும் இயக்கலாம். இதுபோன்ற சிறிய பழக்கங்கள் மாதாந்திர மின்சார மற்றும் தண்ணீர் கட்டணங்களைக் குறைக்க உதவும்.

வீட்டை நிர்வகிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. தினமும் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது, மளிகைப் பொருட்கள் வாங்குவது, குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வது எனப் பல வேலைகள் காத்திருக்கும். இவற்றைச் சரியாகத் திட்டமிடாமல் செய்தால் நேரம் மட்டுமின்றி உடல் உழைப்பும் அதிகமாகும். சில நேரங்களில் ஒரு வேலையை முடிப்பதற்குள் மற்றொரு வேலை வந்துவிடும். இதனால் மன அழுத்தமும் ஏற்படலாம். ஆனால், அன்றாட வாழ்க்கையில் சில எளிய பழக்கங்களைப் பின்பற்றினால் வீட்டு வேலைகளைச் சிரமமின்றி முடிக்க முடியும். அதுமட்டுமின்றி தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். அந்த வகையில் வீட்டைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க உதவும் சில பயனுள்ள பழக்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1. அடுத்த நாளுக்கான வேலைகளை முதல் நாளே திட்டமிடுங்கள்!

காலையில் எழுந்தவுடன் என்ன வேலை செய்வது என்று யோசித்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, முந்தைய நாள் இரவே அடுத்த நாளுக்கான வேலைகளைத் திட்டமிடலாம். சமையல், துணி துவைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், வெளியில் செல்ல வேண்டிய வேலைகள் என அனைத்தையும் பட்டியலிடுங்கள். இதில் அவசரமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். இதனால் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதும், முக்கியமான வேலைகளை மறப்பதும் தவிர்க்கப்படும்.

2. வாரத்திற்கான உணவுப் பட்டியலைத் தயாரியுங்கள்!

தினமும் என்ன சமைப்பது என்று யோசிப்பதிலேயே கணிசமான நேரம் செலவாகும். இதைத் தவிர்க்க வாரத்தின் ஏழு நாட்களுக்கும் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பம், வீட்டில் இருக்கும் பொருட்கள், சந்தையில் கிடைக்கும் காய்கறிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்கலாம். இதனால் கடைசி நேரத்தில் உணவுப் பொருட்களைத் தேடி அலைய வேண்டியதில்லை.

3. மளிகைப் பொருட்களை முறையாக அடுக்கி வையுங்கள்!

அரிசி, பருப்பு, சர்க்கரை, மசாலாப் பொருட்கள் போன்றவற்றைத் தனித்தனி காற்றுப் புகாத டப்பாக்களில் சேமித்து வைக்க வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும் பொருளின் பெயரைக் குறிப்பிட்டு வைப்பது நல்லது. ஏற்கெனவே வாங்கிய பொருட்களை முதலில் பயன்படுத்தும் வகையில் பழைய பொருட்களை முன்னால் வைக்கவும். இதனால் பொருட்களைத் தேடி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. மேலும், பொருட்கள் காலாவதியாகி வீணாவதையும் தவிர்க்கலாம்.

4. சமையலுக்குத் தேவையான முன்தயாரிப்புகளைச் செய்யுங்கள்!

காலை நேரத்தில் சமையலை விரைவாக முடிக்க முந்தைய நாள் இரவே சில வேலைகளைச் செய்து வைக்கலாம். தேவையான பருப்புகளை ஊறவைத்தல், காய்கறிகளைத் தேர்வு செய்து கழுவுதல், மசாலாப் பொருட்களைத் தயாராக வைத்தல் போன்றவற்றைச் செய்யலாம். நறுக்கிய காய்கறிகளைச் சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் குளிர்சாதனப் பெட்டியில் சரியான வெப்பநிலையில் வைக்க வேண்டும். இதனால் காலையில் சமையல் வேலைகளை விரைவாக முடிக்க முடியும்.

5. மாதாந்திர செலவுகளைக் கண்காணியுங்கள்!

வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்கள் வரை அனைத்து செலவுகளையும் குறித்து வையுங்கள். மாதத்தின் தொடக்கத்திலேயே உணவு, மளிகை, மருத்துவம், போக்குவரத்து போன்றவற்றுக்குத் தனித்தனியாகப் பட்ஜெட் அமைக்கலாம். இதன் மூலம் எந்தப் பிரிவில் அதிகம் செலவு செய்கிறோம் என்பதை அறிந்து தேவையற்ற செலவுகளைக் குறைக்க முடியும்.

6. தள்ளுபடியைப் பார்த்து மட்டும் பொருட்களை வாங்காதீர்கள்!

கடைகளில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் உடனே பொருட்களை வாங்கிவிடக் கூடாது. அந்தப் பொருள் உண்மையிலேயே தேவையா, அதன் விலை மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, பெரிய பாக்கெட்டுகளில் வாங்கினால் மட்டுமே விலை குறைவாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டருக்கான விலையைக் கணக்கிட்டுப் பார்த்து வாங்குவது நல்லது.

7. தேவையற்ற பொருட்களை அவ்வப்போது அகற்றுங்கள்!

பயன்படுத்தாத பழைய துணிகள், உடைந்த பொருட்கள், தேவையற்ற சமையலறை உபகரணங்கள் போன்றவை வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். மாதம் ஒருமுறை வீட்டில் உள்ள பொருட்களைச் சரிபார்த்து, இனி தேவைப்படாதவற்றைத் தனியாகப் பிரிக்கலாம். நல்ல நிலையில் இருப்பவற்றை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுக்கலாம். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களையும் தனியாக வைக்கலாம். இதனால் வீட்டில் இடம் மிச்சமாவதுடன் சுத்தம் செய்வதும் எளிதாகும்.

8. தினசரி மற்றும் வாராந்திர சுத்தம் எனப் பிரித்துக்கொள்ளுங்கள்!

வீடு முழுவதையும் ஒரே நாளில் சுத்தம் செய்ய முயற்சி செய்தால் அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படும். அதற்குப் பதிலாக தினமும் தரையைப் பெருக்குதல், சமையலறையைச் சுத்தம் செய்தல், பயன்படுத்திய பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம். வாரத்திற்கு ஒருமுறை ஜன்னல்கள், மின்விசிறிகள், அலமாரிகள் போன்றவற்றைச் சுத்தம் செய்ய நேரம் ஒதுக்கலாம். இதனால் வீட்டில் அழுக்கு சேர்வது குறையும்.

9. பழைய பொருட்களை மறுபயன்பாடு செய்யுங்கள்!

வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய பருத்தித் துணிகளைச் சுத்தம் செய்யும் துணிகளாகப் பயன்படுத்தலாம். நல்ல நிலையில் இருக்கும் பழைய புடவைகளைக் கொண்டு தலையணை உறைகள், பைகள், திரைச்சீலைகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். கண்ணாடி ஜாடிகளை மளிகைப் பொருட்களைச் சேமிக்கவும் பயன்படுத்தலாம். இதனால் தேவையில்லாமல் புதிய பொருட்களை வாங்குவதற்கான செலவைக் குறைக்க முடியும்.

10. வீட்டு வேலைகளை அனைவரும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஒரே நபர் செய்வது தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். எனவே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களால் முடிந்த வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தங்கள் புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைக்கலாம். மற்றவர்கள் பாத்திரங்களை அடுக்குதல், காய்கறிகளைத் தேர்வு செய்தல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் உதவலாம். இதனால் ஒருவரின் வேலைப்பளு குறைவதுடன் குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே பொறுப்புணர்வு ஏற்படும்.

11. பொருட்களைப் பயன்படுத்தியதும் அதற்குரிய இடத்தில் வையுங்கள்!

வீட்டில் பல நேரங்களில் பொருட்கள் கிடைக்கும் இடங்களில் வைக்கப்படுவதால் பின்னர் தேடுவதற்கு அதிக நேரம் செலவாகிறது. சாவி, பணப்பை, சார்ஜர், ரிமோட் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்குங்கள். பயன்படுத்தியவுடன் மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வீட்டில் தேவையற்ற குழப்பம் ஏற்படாது.

12. மின்சாரம் மற்றும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!

தேவையில்லாத நேரங்களில் மின்விசிறி, விளக்குகள் போன்றவற்றை அணைத்து வைக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். துணி துவைக்கும் இயந்திரத்தில் குறைவான துணிகளைக் கொண்டு அடிக்கடி இயக்குவதற்குப் பதிலாக, போதுமான துணிகள் சேர்ந்ததும் இயக்கலாம். இதுபோன்ற சிறிய பழக்கங்கள் மாதாந்திர மின்சார மற்றும் தண்ணீர் கட்டணங்களைக் குறைக்க உதவும்.

இப்படி வீட்டு வேலைகளை எளிதாக்குவதற்கு பெரிய மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. தினசரி திட்டமிடுதல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் கண்காணித்தல், வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற சிறிய பழக்கங்களைப் படிப்படியாகப் பின்பற்றினாலே போதும். ஒரே நாளில் அனைத்தையும் கடைப்பிடிக்க முயற்சி செய்யாமல், ஒவ்வொரு பழக்கமாக அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வீட்டைச் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிப்பதுடன் நேரம், பணம் மற்றும் உடல் உழைப்பையும் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.