ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில், அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அடுத்த எபிசோடில் அய்யப்பன் துப்பாக்கியுடன் மிரட்டுவதும், பொன்னியிடம் கபிலன் பற்றிய ரகசியத்தை வர்மா வெளிப்படுத்த முயற்சிப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவாவும் ஜானும் அய்யப்பனின் வீட்டிற்குச் சென்று, அங்குள்ள வேலையை தங்களிடம் மாற்றிக் கொடுக்கும்படி இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறுகின்றனர். இதுபற்றி அய்யப்பனின் மனைவி அவருக்கு தகவல் தெரிவிக்கிறார். உடனே அங்கு வரும் அய்யப்பன், கையில் துப்பாக்கியுடன் சிவா மற்றும் ஜானை மிரட்டி, பெண் காவலரிடம் ஒப்படைத்து கைது செய்யப்போவதாக எச்சரிக்கிறார்.

இதற்கிடையில், அய்யப்பனைத் தேடிக் கண்டுபிடிக்க அயலி முயற்சி செய்கிறார். ஜான் சேகரித்து வைத்திருந்த தொலைபேசி எண்களில் ஒவ்வொன்றாக தொடர்புகொண்டு விசாரிக்கிறார். இறுதியாக அய்யப்பனின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்கும் அயலி, அவரிடம் புத்திசாலித்தனமாகப் பேசி தகவல்களைப் பெறுகிறார்.

ஆனால், அயலியை மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் பின்தொடர்ந்து வருகிறார். இதை கவனிக்கும் அயலி, உடனடியாக கபிலனின் உதவியுடன் ஒரு திட்டம் தீட்டி, தன்னைப் பின்தொடர்ந்த நபரைத் திசைதிருப்பி அங்கிருந்து தப்பிக்கிறார்.

மறுபுறம், பொன்னியைச் சந்திக்கும் வர்மா, அவரது அண்ணன் கபிலன் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தத் தயாராகிறார். கபிலனைப் பற்றிய உண்மையான வீடியோ ஒன்றைக் காட்டப்போவதாகக் கூறி லேப்டாப்பைத் திறக்கிறார்.

அந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். துப்பாக்கிச் சூடு யார் மீது நடத்தப்பட்டது? வர்மா பொன்னியிடம் காட்ட முயன்ற வீடியோவில் என்ன ரகசியம் இருக்கிறது? கபிலனின் உண்மையான முகம் பொன்னிக்குத் தெரிய வருமா? என்ற பல கேள்விகளுடன் அடுத்த எபிசோடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.