ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், பிரம்மா கோவில் உள்ளது. கரூர் மாவட்டம் தென்னிலை அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகனான பிளஸ்-2 படிக்கும் மாணவர் கேசவதிதன் (வயது 17), செல்லமுத்து என்பவரின் மகன் ராஜ்குமார் (30) உள்பட 12 பேர் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

அவர்கள் அங்குள்ள மணல்மேடு பகுதிக்கு சென்று குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளனர். அப்போது கேசவதிதன் திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்டதும் அவரை காப்பாற்ற தண்ணீரில் ராஜ்குமார் குதித்து உள்ளார். இதில் 2 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

தகவல் அறிந்ததும் கொடுமுடி நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டனர். திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியான சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.