இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட 70 சதவிகிதம் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், அந்நாட்டுடனான விமான போக்குவரத்து சேவைக்கு இன்று இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31 இரவு 11.59 மணி வரை இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 266 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயணிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு புதியவகை கொரோனா பரவியுள்ளதா? என்பது குறித்து ஆராய வைரஸ் உறுதி செய்யப்பட்ட 5 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது அந்த 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். வைரஸ் உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் பயணித்த எஞ்சிய பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.