திருகோணலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைககள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (23) மாலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றது.

சுகாதாரத்துறையினரின் தகவல்படி கடந்த 06 நாட்களில் 66 கொவிட் தொற்றாளர்கள் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கிண்ணியா மற்றும் ஜமாலியா போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும் மூதூர் பிரதேச பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இத்தொற்று பரவியுள்ளது.

எனவே பொதுமக்கள் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொவிட் பரவல் பற்றி அறிவித்தல்களை விடுத்து உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்க மக்களுக்கு தெரியப்படுத்துமாறு உரிய திணைக்கள தலைவர்களுக்கு ஆளுநரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மக்கள் இச்சந்தர்ப்பத்தில் மிக பொறுப்புடன் செயற்படல் வேண்டும். தமது பிரதேசத்தில் கொவிட் தொற்று பரவாவண்ணம் கிராமிய பாதுகாப்புக்குழுக்களை வலுப்படுத்தல் வேண்டும். அவதானம் மிக்க பிரதேச மக்கள் அநாவசிய பயணங்களை தவிர்ப்பதுடன் வயோதிபர்கள் மற்றும் தொற்றா நோய் உள்ளவர்களை வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியம் பற்றியும் இதன்போது ஆளுநரால் வலியுறுத்தப்பட்டது.

கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.