ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரது மனைவி பத்மஜா. தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அலெக்கியா (27), சாய் திவ்யா (22) என்ற இரு மகள்கள் உள்ளனர். இத்தம்பதியினர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக இருவரும் பூஜைகள் நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

image

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வீட்டில் பூஜைகள் செய்து கொண்டிந்தபோது, முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அவரது பெற்றோர் அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் மகள்களை பூஜை அறையில் நிர்வாணமாக கிடத்தி சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்திய போது, புருஷோத்தம், பத்மஜா இருவரும், 'நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள்' என கூறினார். 

இதையடுத்து பூஜை அறையில் நிர்வாண நிலையில் கிடந்த 2 மகள்களின் சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, புருஷோத்தம், பத்மஜா இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.