ருமேனிய மினிகாப் சாரதி தனது பயணிகளில் ஒருவரால் வடக்கு லண்டனில் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து பொலிசார் கொலை வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். டோட்டன்ஹாமில் உள்ள ஒரு பாடசாலைக்கு வெளியே நேற்று இரவு அவரது வாகனத்திலேயே ரத்தவெள்ளத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது. ருமேனியரான 37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

மினிகாப் சாரதியான பிரிங்கி, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பொலிசார், தப்பி ஓடிய ஒரு பயணியால் பிரிங்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர்.

பேருந்து சாரதி ஒருவரே சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2015-ல் இருந்தே பிரிங்கி மினிகாப் சாரதியாக பணியாற்றி வருகிறார். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கொள்ளை நடந்ததாக எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

லண்டனில் இந்த ஆண்டில் இதுவரை மினிகாப் சாரதி பிரிங்கியுடன் சேர்த்து 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.