பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முக்கியமான வீரருமான கே.எல்.ராகுலுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது, இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு குடல்வால் அழற்சி எனும் ‘அப்பெண்டிசைட்டிஸ்’ இருப்பது சோதனையில் தெரியவந்ததையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்தியில், “நேற்று இரவு கே.எல்.ராகுல் வயிற்று வலியால் துடித்தார். மருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை. அவரை உடனே எமர்ஜென்சி அறைக்கு அழைத்து சென்று சோதனைகள் செய்ததில் அவருக்கு திடீரென குடல்வால் அழற்சி அதாவது அப்பெண்டிசைட்டிஸ் இருப்பது தெரியவந்தது. இதனை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற முடியும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளது.
இன்று அகமதாபாத்தில் இரவு ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது, இந்த நிலையில் அவருக்கு இப்படி ஒரு அப்பெண்டிசைட்டிஸ் ஏற்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் 7 போட்டிகளில் 331 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார், ஆரஞ்சு தொப்பிக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்தார்.
அன்று 57 பந்துகளில் 91 ரன்கள் விளாசி தன் மந்தமான பேட்டிங் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கே.எல்.ராகுல்., இந்நிலையில் அவர் அறுவை சிகிச்சை முடிந்து உடனேயெல்லாம் ஆட முடியாது, எனவே இந்த ஐபிஎல் தொடர் அவரைப்பொறுத்தவரை முடிந்து விட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதுபற்றியெல்லாம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 3-ல் வென்று 6 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.