டெல்லியில் நோயாளி ஒருவரின் கல்லீரலில் இருந்து 20 செ.மீ நீள கத்தியை எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளர்.
ஹரியானாவைச் சேர்ந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், கஞ்சா எதுவும் கிடைக்காததால் மனஉளைச்சலில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். அதனால் அவருக்கு பசியின்மை மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒன்றரை மாதமாக அவர் இதனை யாரிடமும் கூறவில்லை. இதையடுத்து உடல்நலக் கோளாறால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவரது வயிற்றில் கல்லீரலில் 20 செ.மீ. நீள கத்தி இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர்தான் கத்தியை விழுங்கியது குறித்து நோயாளி கூறியுள்ளார். கல்லீரலில் முழுமையாகப் பதிந்திருந்த கத்தியை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 3 மணி நேரம் நடந்த சிகிச்சையில் அந்தக் கத்தி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
இது குறித்து கூறிய மருத்துவர்கள், பித்த நாளம், தமனி மற்றும் நரம்புக்கு மிக நெருக்கமாக கத்தி இருந்ததாக கூறியுள்ளனர். சிறு தவறு நடந்தாலும் நோயாளி இறந்து விடும் நிலை. அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கல்லீரலில் பதிந்திருந்த கத்தியை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.