அஸர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளின் முக்கிய நகரங்கள் மீது பரஸ்பர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த 9 நாட்களாக நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அஸர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளின் இராணுவத்துக்கு இடையே கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த மோதல் ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு குண்டு வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு மோசமாகியுள்ளது.

அஸர்பைஜானின் 2ஆவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கஞ்சா நகர் மீது அர்மீனியா இராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அஸர்பைஜான் இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது போரை தூண்டுவதற்கான ஒரு தெளிவான ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று அஸர்பைஜான் இராணுவ அமைச்சர் ஜகரி ஹசனோவ் குற்றம்சாட்டியுள்ளார்.

அர்மீனியா இராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் பொதுமக்களில் உறுவர் உயிரிழந்ததோடு, மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற பயத்தில் மக்கள் பலரும் பதுங்கு குழிகளில் பதுங்கி இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் கஞ்சா நகரில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும் இராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அர்மீனியா இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள அஜர்பைஜான் இராணுவம் கஞ்சா நகரில் இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அர்மீனியா தரப்பு பரப்பிய தகவல்கள் ஆத்திரமூட்டும் மற்றும் தவறானவை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் எதிரி இராணுவத்தின் தாக்குதலால் பொதுமக்களும் அவர்களது உள்கட்டமைப்புகளும் பண்டைய வரலாற்று கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸர்பைஜான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் உள்ள ஸ்டெபனாகெர்ட் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது அஸர்பைஜான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த பிராந்தியத்தின் தன்னாட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை அஸர்பைஜான் இராணுவம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.