முருகப்பெருமானின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான விளங்குவது வேல். அதனால் முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு வேல் வழிபாடு செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பக்தர்கள் முருகனின் அருளைப் பெறவும், பகைவர்களை வெல்லவும், தடைகளை நீக்கவும் வேலை வழிபடுகிறார்கள்.
முருகப் பக்தர்கள் பலரும் வீடுகளில் முருகனின் விக்ரஹங்கள், வேல், மயிலிறகு ஆகியவற்றை வைத்து பூஜை செய்வது உண்டு. இதில் அதிகமானவர்கள் தங்களின் வீடு, கடை, வாகனம் ஆகியவற்றில் வேல் வாங்கி வைத்திருப்பார்கள்.
வேல், முருகப் பெருமானின் மறுவடிவமாகவும், ஞானம், வெற்றி, தைரியம் ஆகியவற்றின் வடிவமாகவும் பார்க்கப்படுகிறது.
வேலும் மயிலும் துணை என சொல்லுவதால் முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேல் நம்முடன் இருந்தால் நம்மை எந்த தீமையும் நெருங்காது, முருகப் பெருமானே நம்முடன் இருப்பதற்கு சமம் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. இதே போல் பலரும் வீட்டின் பூஜை அறையில் முருகனின் விக்ரஹம் மற்றும் வேல் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.
வீட்டில் முருகன் விக்ரஹம் மட்டுமல்ல வேறு தெய்வத்தின் சிலையை வாங்கி வைத்து வழிபட்டாலும் அதற்கென இருக்கும் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இதை மீறினால் தெய்வத்தின் அருளை பெறுவதற்கு பதிலாக, கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். வீட்டின் பூஜை அறையில் வைத்தும் வழிபடுவதற்காக வாங்கும் விக்ரஹங்கள் இரண்டு அடிக்குள் உயரத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் உயரம் கொண்ட சிலையை வீட்டில் வைக்கக் கூடாது.
அதே போல் சிலைகள் வைத்து வழிபட்டால் அவற்றிற்கு தினமும் முறையாக அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும். தினமும் அபிஷேகம் செய்ய முடியாவிட்டாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.
முருக வழிபாட்டிலும் அதே நியதி உண்டு. தினமும் பால், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் என பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும், தினமும் ஒரு வகையான உணவு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும் என்பது கிடையாது.
மிக எளிமையாக சுத்தமாக தண்ணீர் கொண்டு மட்டும் அபிஷேகம் செய்தாலே போதும். அதே போல் நைவேத்தியமும் மிக எளிமையாக வாழைப்பழம், பால், கற்கண்டு, சர்க்கரை, உலர் திராட்சை போன்றவற்றை தினமும் ஒரு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். நமக்கு என்ன பூ கிடைக்கிறதோ அதை வைத்து வழிபடலாம்.
வீட்டில் வேல் வைத்து வழிபடும் பலரும் வேலை மட்டும் தனியாக வைத்து, அதற்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, வழிபடுகிறார்கள். ஆனால் இது மிகவும் தவறான செயலாகும்.
முருகன் வேறு, வேல் வேறு கிடையாது. வேல் இல்லாமல் முருகன் இல்லை; முருகன் இல்லாமல் வேல் இல்லை. அதனால் எப்போதும் முருகப் பெருமானுடன் வேலை சேர்த்து வைத்து வழிபடுவது தான் சிறப்பு.
வேலை சாதாரணமாக சுவாமி படங்களின் மீது சாய்த்து வைக்கக் கூடாது. முதல் விக்ரஹத்துடன் சேர்த்தோ அல்லது ஒரு பீடத்தின் மீதோ அல்லது ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி அல்லது விபூதியை வைத்து அதற்கு மத்தியிலேயே நிறுத்தி வைக்க வேண்டும்.
வேல் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளவர்கள் தினமும் அல்லது செவ்வாய், சஷ்டி, கிருத்திகை, விசாகம் நாட்களில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு, பிறகு சுத்தமான விபூதியால் அபிஷேகம் செய்து விட்டு, சுத்தமான துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, தீப தூப ஆராதனைகள் காட்டினாலே முருகப் பெருமான் ஓடி வந்து அருள் செய்வார்.
இறைவனை நாம் எந்த முறையில், என்னென்ன பொருட்கள் படைத்து வழிபடுகிறோம் என்பது முக்கியம் அல்ல. மனதில் என்ன எண்ணத்துடன், என்ன நினைவுடன் வழிபடுகிறோம் என்பது தான் முக்கியம். தூய்மையான அன்புடன் எப்படி வழிபட்டாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்வார்.