தற்போது 80 வயதை கடந்துள்ள இளையராஜா இன்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா கர்வம் பிடித்தவர் என்று இணையத்தில் அதிகம் தகவல்கள், வீடியோக்களில் பலரும் கூறி வரும் நிலையில், இது எதனால் வந்தது? இதற்கு யார் காரணம் என்பது குறித்து அவரது சகோதரர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளனராக இருந்தவர் இளையராஜா. தொடர்ந்து 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புதுமுக இயக்குனர்கள் பலரும் இவரை தேடி வர தொடங்கினர். அதேபோல், முன்னணி இயக்குனர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்த இளையராஜா, தனது இசை மற்றும் பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஹட்டாக்கியுள்ளார் என்று பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூறியுள்ளனர். தற்போது 80 வயதை கடந்துள்ள இளையராஜா இன்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மேலும், பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவரது பாடல்கள் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் நிலையில், இவரின் நடவடிக்கைகள் அவ்வப்போது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் இளையராஜா கர்வம் பிடித்தவர் என்று இணையத்தில் அவர் மீதான விமர்சனங்கள் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர், பாடல்களை மற்ற படங்களில் பயன்படுத்தும்போது காப்பி ரைட்ஸ் பிரச்னைக்காக அவர் வழக்கு தொடர்வது தான் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கூறுகையில், இளையராஜாவுக்கு கர்வம் இருக்கிறது. ஆனால் அதை உருவாக்குவது இவர்கள் தான். அவருக்கு கர்வம் வருகிறதோ இல்லையோ அதை தூண்டிவிடுகிறார்கள். அவர் வேலை இல்லாமல் உட்கார்ந்துவிட்டார் என்று பேசுகிறார்கள். அவர்கள் அவரது பாடலை எடுத்து பார்க்க வேண்டும். சில பத்திரிக்கையாளாகளும், யூடியூபர்களும் தான் அவரது கர்வத்தை தூண்டிவிடுகிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு வேண்டாத வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். என் வேலையை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று இருக்கும்போது இப்படி எதையாவது சொன்னால் கோபம் வரும் தானே. நான் என் வேலையில் தான் இருக்கிறேன். எனக்கு கர்வம் இல்லாமல் இருக்குமா என்று அவர் சொல்வது சரிதான். உலகளவில் இசைக்கலைஞர்கள், சிம்பொனி கலைஞர்கள் பலரும் இவரை சந்தித்து வருகிறார். அப்படி இருப்பவரை கர்வம் பிடித்தவர் என்று சொன்னால், ஆமாம் நான் கர்வம் பிடித்தவன் தான் என்று அவர் சொல்லாமல் இருப்பாரா என்று கூறியுள்ளார்.
