"ராகு-கேது பெயர்ச்சி நிகழும்போது, அதாவது 2026 டிசம்பருக்குப் பிறகு, த்ரிஷா அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று பிரபல ஜோதிடர் பிரதோஷ் கணித்து இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபர் நடிகை த்ரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் அவர் குறித்து சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பாக, த.வெ.க தலைவரும், முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருக்கு த்ரிஷா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் “எந்தவொரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை. மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அக்கா த்ரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம். மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம்” என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியது.
த்ரிஷா அரசியல் என்ட்ரி
இந்த நிலையில், 2026 டிசம்பர் முதல், நடிகை த்ரிஷா அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பிரபல ஜோதிடர் பிரதோஷ் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "த்ரிஷா கிருஷ்ணன், அடுத்த அரசியல் அத்தியாயம். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் வலிமையான சேர்க்கை, ஜோதிட ரீதியாக, இது அதிகாரம், துணிச்சல், வசீகரம் மற்றும் மக்கள் செல்வாக்கைக் குறிக்கும் ஒரு கலவையாகும்.
திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு, த்ரிஷாவின் அடுத்த நகர்வு பெரும் கவனத்தை ஈர்க்கக்கூடும். 2026 மே 4 அன்று, விஜய்யின் தேர்தல் வெற்றியும் த்ரிஷாவின் பிறந்தநாளும் ஒரே நாளில் அமைந்திருப்பது, இந்த நிகழ்வுக்கு ஒரு சுவாரஸ்யமான பரிமாணத்தை அளிக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு அவர் திருப்பதிக்குச் சென்றதாகக் கூறப்படும் செய்தி, பொதுமக்களிடையே மேலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
த்ரிஷாவின் அரசியல் பிரவேசம் நெருங்கி வருகிறதா? என்றால், அந்த வாய்ப்பு மிகவும் சுவாரசியமானது. காலம் தான் இதற்கான விடையைச் சொல்ல வேண்டும். திரைத்துறை நட்சத்திரங்களை உருவாக்குகிறது; அரசியல் புதிய அதிகாரச் சமன்பாடுகளை உருவாக்குகிறது. வரப்போகும் நாட்களில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ராகு-கேது பெயர்ச்சி நிகழும்போது, அதாவது 2026 டிசம்பருக்குப் பிறகு, த்ரிஷா அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொறுத்திருந்து பார்ப்போம்." என்று அவர் கூறியுள்ளார்.
